100-வது நாளைத் தொட்ட உக்ரைன் போர்: 20 சதவீதப் பகுதிகளைக் கைப்பற்றிய ரஷ்யா

100-வது நாளைத் தொட்ட உக்ரைன் போர்: 20 சதவீதப் பகுதிகளைக் கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி 100 நாட்கள் ஆகின்றன. இந்தச் சூழலில் தங்கள் நாட்டின் 20 சதவீத நிலப்பரப்பு தற்போது ரஷ்யாவின் கைகளில் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட க்ரைமியா, டோன்பாஸின் சில பகுதிகள் உட்பட உக்ரைனின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை இப்போது ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள், தற்போது டோன்பாஸ் பிராந்தியத்தில் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே இந்தப் போரானது அதிக நாட்கள் நீடிக்க வாய்ப்பிருப்பதாக உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “நேட்டோ ரஷ்யாவுடன் நேரடி மோதலை விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தும் அதே நேரத்தில், நீண்ட காலப் போருக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்ய குண்டுவீச்சில்
உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்ய குண்டுவீச்சில்

உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் எதிர்பார்த்ததைவிட மெதுவான முன்னேற்றம் இருந்தாலும், ரஷ்யாவின் படைகள் தொடர்ந்து அப்பகுதிகளில் முன்னேறி வருகின்றன. டோன்பாஸ் பிராந்தியத்தின் ஒரு பகுதியான லுகான்ஸ்கில் உள்ள தொழில்துறை நகரமான செவெரோடோனெட்ஸ்கில் தற்போது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. அந்த நகரத்தின் 80 சதவீதப் பகுதிகள் தற்போது ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய ரசாயன ஆலைகளில் ஒன்றான செவெரோடோனெட்ஸ்க் அசாட் தொழிற்சாலையின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் அங்கு மெத்தனால் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிடங்கின் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றிய மரியுபோல் நகரில் இருந்த உருக்காலையை அந்நாட்டுப் படையினர் முற்றுகையிட்டதைப் போன்று இப்போது இந்த தொழிற்சாலையின் நிலை மாறியுள்ளது.

உலகில் தானிய உற்பத்தி செய்யும் முதன்மை நாடுகளில் ஒன்றாக உக்ரைன் இருப்பதால், இந்தப் போரால் உலகளாவிய உணவு நெருக்கடியை உருவாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது, முக்கியமாக இந்தப் போரால் ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப்பொருட்கள் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரான செனகல் நாட்டின் அதிபர் மேக்கி சால், இது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in