மலேசியாவில் சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலேசியாவில் வடக்கு ரிசார்ட் தீவான லங்காவியில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட ஒரு சிறிய ரக விமானம் தலைநகர் கோலாலம்பூருக்கு மேற்கே உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அதனால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஆறு பயணிகள், இரண்டு விமான ஊழியர்கள் என அதிலிருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களில் மத்திய பகாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜோஹரி ஹருனும் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விமானம் சாலையில் விழுந்ததால் அவ்வழியாகச் சென்ற இரு வாகன ஓட்டிகள் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த ஒருவரும், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்து மலேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.