பிரிட்டிஷ் குடிமக்களுக்கு மரண தண்டனை: ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பிரிட்டன் கண்டனம்

டைலான் ஹீலி
டைலான் ஹீலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அந்நாட்டில் தங்கியிருக்கும் பல்வேறு நாட்டின் குடிமக்களும் அங்குள்ள அதிகாரபூர்வமற்ற படைகளில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டுவருகின்றனர். இதில் உக்ரைனில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களும் அடக்கம். அவர்களில் பலரைக் கைதுசெய்திருக்கும் ரஷ்யா, ராணுவ ரீதியில் விசாரணை நடத்தி தண்டனையும் வழங்குகிறது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஏற்கெனவே பிரிட்டனைச் சேர்ந்த இருவர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் வசம் உள்ள டோனெட்ஸ்க் பகுதியில் மூவருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹில், டைலான் ஹீலி ஆகிய இருவரும் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றதாகவும், பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அவர்களில் டைலான் ஹீலி உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்தவர் என்றும், ஆயுதம் ஏந்திப் போரிட்டவர் அல்ல என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், “போர்க்குற்றவாளிகளையும், குடிமக்களையும் அரசியல் நோக்கங்களுக்காக நியாயமற்ற வகையில் ரஷ்யா நடத்துவதைக் கண்டிக்கிறோம். இதுதொடர்பாக ரஷ்யாவிடம் பேசியிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, ரஷ்யப் படைகளின் முற்றுகைக்குள்ளான துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அஸோவ்ஸ்டால் உருக்கு ஆலையில் பதுங்கியிருந்த 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்தனர். அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக மிகப் பெரிய தீர்ப்பாயத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in