‘பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பெருந்தொற்று... இந்தச் சூழலில் போர் தேவையா?’

ரஷ்யாவிடம் உரிமையாகக் கேள்வி எழுப்பிய இந்தியா
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயங்கர்...
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயங்கர்...

இது போருக்கான யுகம் அல்ல என்றும், உக்ரைன் போர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துவரும் நிலையில், மாஸ்கோவுக்கு அதிகாரபூர்வப் பயணமாகச் சென்றிருக்கிறார் ஜெய்சங்கர். அவருடன் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளும் சென்றிருக்கின்றனர். ஏற்கெனவே, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள், உரங்கள் போன்றவற்றை சலுகை விலையில் ரஷ்யா வழங்கிவருகிறது. இந்தச் சூழலில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விஸ்தரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் இந்தியா - ரஷ்யா இடையே நடந்திருக்கும் முக்கியமான சந்திப்பு இது.

மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவை இன்று சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உக்ரைன் போர் தொடர்பாகப் பேசிய அவர், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதையே இந்தியா வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

“கடந்த சில வருடங்களாக கோவிட் பெருந்தொற்று, நிதி நெருக்கடிகள், வர்த்தக ரீதியான சிரமங்கள் போன்றவற்றை எதிர்கொண்டோம். அவை உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போது இவற்றின் உச்சமாக உக்ரைன் விவகாரத்தின் விளைவுகளை நாம் பார்க்கிறோம். கூடவே, பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் உலகளாவிய வளர்ச்சி மற்றும் வளம் மீது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன” என்று கூறிய ஜெய்சங்கர், உலகளாவிய நிலைமை மற்றும் சில பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் குறிப்பிட்டார். இது போருக்கான தருணம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in