சீனாவுக்கும் தைவானுக்கும் என்னதான் பிரச்சினை?

நான்சி பெலோசியின் தைவான் பயணம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை
சீனாவுக்கும் தைவானுக்கும் என்னதான் பிரச்சினை?

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றிருப்பது சீனாவை ஆத்திரப்படுத்தியிருக்கும் நிலையில், அவரது பயணம் போர் வெறியைத் தூண்டும் பொறுப்பற்ற செயல் என அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

எனினும், புவிஅரசியலில் ரொம்பவே குழப்பமான சூழலில் இருக்கும் தைவான் மக்களில் பலர் இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளியிருப்பதுடன், நான்சி பெலோசியை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள்.

‘சீனா’வாக கருதப்பட்ட தைவான்

தைவான் சீனாவின் ஓர் அங்கமா இல்லையா எனும் விவாதம் இப்போது நடந்துகொண்டிருக்கலாம். ஒரு காலத்தில் தைவான் அரசுதான் அதிகாரபூர்வமான சீன அரசு என அங்கீகரிக்கப்பட்டிருந்தது. வரலாற்று ரீதியாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மிக நீண்ட உறவு உண்டு. தைவானில் முதன்முதலில் குடியேறியவர்கள் சீனாவிலிருந்து சென்ற பழங்குடியினர்தான் எனக் கூறப்படுகிறது.

கி.பி 239-ம் ஆண்டில், சீனப் பேரரசர் ஒருவர் தைவானுக்கு ஒரு பயணக் குழுவை அனுப்பினார். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த சீன ஆவணங்களில் அதுதொடர்பான குறிப்புகள் இருக்கின்றன. தைவானைச் சொந்தம் கொண்டாட சீனா அதை ஒரு ஆதாரமாகவே முன்வைக்கிறது. 17-ம் நூற்றாண்டின் சில ஆண்டுகள் டச்சு காலனியாக தைவான் இருந்தது. பின்னர் சீனாவின் சிங் பேரரசின்கீழ் நிர்வகிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் ஏராளமான சீனர்கள் தைவானில் குடியேறினர். பலர் பிழைப்பு தேடி அங்கு சென்றவர்கள்.

பின்னர், முதலாம் சீன-ஜப்பான் போரில் ஜப்பான் வென்றதையடுத்து, 1895-ல் தைவான் ஜப்பான் வசமானது. எனினும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சீனாவின் வசம் தைவான் வந்தது. அப்போது சீனக் குடியரசு (ஆர்ஓசி) அமெரிக்கா, பிரிட்டன் துணையுடன் தைவானை சீனா ஆட்சி செய்தது.

அதன் பின்னர் ஒரு முக்கியத் திருப்பம் நிகழ்ந்தது. 1949-ல் மாசே துங் (மாவோ) தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி, அப்போதைய சீன ஆட்சியாளரான சியாங் காய்-ஷேக்கின் படைகளைத் தோற்கடித்தது. 15 லட்சம் பேருடன் அவர் தைவானுக்குத் தப்பிச் சென்றார். குவாமின்டாங் (கேஎம்டி) கட்சி சார்பில் அங்கேயே சீனக் குடியரசு அரசை நிறுவி 25 ஆண்டுகள் ஆண்டு வந்தார். அவருடன் சென்றவர்கள் தைவானின் மக்கள்தொகையில் 14 சதவீதம்தான் என்றாலும், அவர்களே அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தினர்.

மீண்டும் சீனாவைக் கைப்பற்ற முடியும் என நம்பிக்கையில் இருந்த சியாங் காய் ஷேக்கின் சீனக் குடியரசுதான் மொத்த சீனாவையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவின் பெயரில் அங்கம் வகித்தது சியாங் காய் ஷேக்கின் தைவான் அரசுதான். மேற்கத்திய நாடுகளும் அவரது அரசையே சீன அரசாகக் கருதின.

எனினும், பெரும்பாலான மக்கள் சீனாவில் வசிக்கும்போது தைவான் அரசை சீன அரசாக எப்படி கருதுவது எனப் பல நாடுகள் கேள்வி எழுப்பின. அதன் பின்னரே பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்ட சீனாவை உலக நாடுகள் அங்கீரித்தன. 1979-ல் பெய்ஜிங் தலைமையிலான சீன அரசுடன் அமெரிக்கா முறைப்படி தூதரக உறவைத் தொடங்கியது.

தொடங்கிய கசப்பு

இரு தரப்பும் சுமுகமாக இருந்த நிலையில், ஒரே நாடு இரண்டு ஆட்சி முறை எனும் யோசனையை சீன அரசு முன்வைத்தது. தைவான் அதை நிராகரிக்க இரு தரப்பிலும் கசப்பு அதிகரித்தது. தைவானின் சீனக் குடியரசு முறைகேடானது என சீனா அறிவித்தது. 2000-ல் ஜனநாயக முன்னேற்ற கட்சி தைவானில் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் தைவானுக்குச் சுதந்திரம் வேண்டும் எனும் குரல்கள் அதிகரித்தன.

ஆளுங்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சி (டிபிபி) தைவானுக்குச் சுதந்திரம் வேண்டும் எனும் நிலைப்பாட்டைக் கொண்டது. மாறாக, சீனாவுடன் இணைய வேண்டும் என குவாமின்டாங் (கேஎம்டி) விரும்புகிறது. தைவான் மக்கள் மத்தியில் இதுகுறித்து வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலர் சீனாவுடன் இணைய வேண்டும் என விரும்புகின்றனர். சிலர் சுதந்திரம் கோருகின்றனர். பெரும்பாலானோர் இப்போது இருக்கும் நிலையே நீடிக்க வேண்டும் எனக் கருதுபவர்கள். இதற்கிடையே இரு தரப்புக்கும் இடையே வர்த்தக உறவும் உறுதியாக வளர்ந்திருக்கிறது. 1991 முதல் 2021 மே மாதம் வரை சீனாவில் தைவானின் முதலீட்டின் மதிப்பு 193.5 பில்லியன் டாலர்.

அமெரிக்காவின் தெளிவற்ற கொள்கை

தைவான் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவின் நிலைப்பாடு குழப்பமானது. 1979-ல் உருவான தைவானுடனான உறவுகள் குறித்த சட்டம், தைவான் குறித்த உறுதியான நிலைப்பாடு எதையும் எதிரொலிக்கவில்லை. தைவானுடன் ராஜதந்திர ரீதியில் அல்லாத உறவையே கொண்டிருக்கும் அமெரிக்கா, ராணுவ உதவி உள்ளிட்ட சில உதவிகளை மட்டும் செய்கிறது. ஒருவேளை தைவானில் சீனா ஊடுருவினால் ராணுவ ரீதியாகத் தலையிடுவது என்பது அமெரிக்காவின் கொள்கை.

பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்ட சீனாவுடன் தான் அதிகாரபூர்வமாகத் தூதரக உறவைக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தைவானின் வான் எல்லைக்குள் சீன விமானப் படை விமானங்கள் நுழைந்தன.

அமெரிக்க உயரதிகாரிகள் மிக அரிதாகத்தான் தைவானுக்குச் செல்கிறார்கள். கடைசியாக, 1997-ல் அமெரிக்காவின் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் நியூட் கிங்ரிச் தைவானுக்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் அங்கு செல்லும் முதல் அமெரிக்கப் பிரதிநிதி நான்சி பெலோசி தான்.

எதிர்பார்த்தது போலவே அவரது தைவான் பயணம், இந்தப் பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in