ஐந்து தடுப்பூசிகளை உருவாக்கி அசத்திய கியூபா: கண்டுகொள்ளாத சர்வதேச ஊடகங்கள்

ஐந்து தடுப்பூசிகளை உருவாக்கி அசத்திய கியூபா: கண்டுகொள்ளாத சர்வதேச ஊடகங்கள்

கரோனா பெருந்தொற்றுப் பரவலால், பல்வேறு நாடுகளின் மருத்துவக் கட்டமைப்புகள் தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில், உலகமெங்கும் மருத்துவர்களை அனுப்பி மகத்தான சேவை செய்த நாடு கியூபா. பல்வேறு சவால்களுக்கு நடுவில் இந்தச் சேவையை செய்த கியூபா, கரோனாவுக்கு எதிராக 5 தடுப்பூசிகளை உருவாக்கி வெற்றிகரமாக அவற்றைச் செலுத்தி சாதனை செய்தி சர்வதேச ஊடகங்களில் அதிகம் பேசப்படவில்லை.

பொருளாதாரத் தடைகள்

கரோனா பரவல் உலகை உலுக்கியபோது அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கடுமையான பாதிப்புகளையும் மரணங்களையும் எதிர்கொள்ள முடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது உள்நாட்டில் இருந்த மருத்துவக் கட்டமைப்பின் வலிமையால் பெருந்தொற்றைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட தேசம் கியூபா. இத்தனைக்கும் அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் கியூபாவைப் பல்வேறு விதங்களில் முடக்கிப்போட்டிருக்கின்றன. 60 ஆண்டுகளாகவே கியூபா மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்திவரும் அமெரிக்கா, 2019 ஜனவரி முதல் 2020 மார்ச் வரை மட்டுமே மேலும் 90 பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்ததாக அல் ஜஸீரா இதழ் குறிப்பிட்டிருக்கிறது.

அவற்றையெல்லாம் கடந்துதான் மருத்துவத் துறையில் தனது மகத்துவத்தை உலகுக்குக் காட்டியது கியூபா. தடுப்பூசிகளுக்காகப் பணக்கார நாடுகளை லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் சார்ந்திருக்க வேண்டிய சூழலில், யாரையும் எதிர்பார்க்காமல் தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே தயாரித்தது.

ஐந்து தடுப்பூசிகளைத் தயாரிக்கும் முயற்சியில் கியூபா இருப்பதாக, அறிவியல் இதழான ‘ஜர்னல்’ கடந்த ஆண்டு செய்திக் கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிரண்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும், தனது இலக்கைக் கியூபா எட்டிவிட்ட பின்னர் அதுகுறித்து பெரிய அளவில் பேசப்படவில்லை. ஃபைஸர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் குறித்தும், அந்நிறுவனங்களின் தலைவர்கள் குறித்தும்தான் அதிகமாக அலசல் கட்டுரைகளை ஊடகங்கள் வெளியிட்டன.

ஆனால், உலகிலேயே மருத்துவ ஆராச்சியில் பல உன்னத சாதனைகளை நிகழ்த்திய கியூபா, உள்நாட்டிலேயே ஐந்து தடுப்பூசிகளைத் தயாரித்து, (ஜனவரி 20 நிலவரப்படி) 86.54 சதவீத மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்திவிட்டது. இரண்டு அல்ல, மூன்று தவணைகள் என்பதுதான் கூடுதல் விசேஷம். இவற்றில் மூன்று தடுப்பூசிகள் அந்நாட்டின் 93 சதவீத மக்களின் தேவையை ஏறத்தாழ பூர்த்தி செய்துவருகின்றன. புரத அடிப்படையிலான அப்தாலா தடுப்பூசி (சிஐஜிபி-66), சோபிரானா வரிசை தடுப்பூசிகள் என வீரியமிக்க தடுப்பூசிகளை அந்நாடு உருவாக்கி, மக்களைக் காத்துவருகிறது. அவசரகால உதவியாக வெனிசுலா, நிகராகுவா, ஈரான், வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்பி கியூப அரசு உதவிவருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கியூபாவின் ஃபின்லே நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், ஈரானின் பாஸ்டர் நிறுவனம் கரோனா சிகிச்சை தொடர்பான விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டுவருகிறது.

ஃபிடல் காஸ்ட்ரோ
ஃபிடல் காஸ்ட்ரோ

ஃபிடல் போட்ட விதை

1980-களில் உயிரி தொழில்நுட்பவியல் குறித்து வல்லரசு நாடுகளுக்கே போதிய தெளிவின்மை இல்லாத நிலையில், 1 பில்லியன் டாலரை அந்தத் துறையில் முதலீடு செய்தார் கியூபாவின் அப்போதைய அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. அதுமட்டுமல்ல, கியூப மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா, பின்லாந்து, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு ஆய்வுப் பணிகளில் விரிவுபடுத்தினர். அத்துடன், தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை எந்தவித காப்புரிமையும் கோராமல் உலக நன்மைக்காக வழங்கவும் முன்வந்தனர். இதன் பலனாகத்தான், மஞ்சள்காமாலை, போலியோ போன்றவற்றுக்கான மருந்துகளின் விலை மலிவாகக் கிடைக்கத் தொடங்கியது. பல்வேறு விமர்சனங்கள், சீண்டல்களுக்கு மத்தியில்தான் கியூபா இவற்றையெல்லாம் செய்துவருகிறது. கரோனா காலத்தில் தங்கள் நாட்டின் மருத்துவர்களை கியூப அரசு அடிமைகளாக நடத்துவதாக ஆதாரமின்றி ட்ரம்ப் அரசு குற்றம்சாட்டியபோதும் மனிதகுலத்துக்குச் சேவைபுரியும் கியூபாவின் பயணம் நிற்கவில்லை.

மருந்து நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதால், பணக்கார நாடுகள் அதைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை வாங்கிக்குவித்தன. இதனால், தடுப்பூசி விஷயத்தில் உலக அளவில் நிலவிய ஏற்றத்தாழ்வு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் சென்றடையவில்லை. இந்தச் சூழலில், பணக்கார நாடுகளைப் போல நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்காமல், ஏழை நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்கியது கியூபா. இன்றுவரை அதைச் செய்துவருகிறது. சர்வதேச ஊடகங்களின் அங்கீகாரம் பற்றியெல்லாம் அந்நாடு கவலைப்படுவதில்லை என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

புகழ்பெற்ற மொழியியல், தத்துவ அறிஞர் நோம் சோம்ஸ்கி, “கரோனா பெருந்தொற்றுக்கு நடுவே உண்மையான சர்வதேசத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் ஒரே நாடு கியூபாதான்” என்று புகழாரம் சூட்டியிருந்தார். அதற்கு முழுத் தகுதி கொண்ட நாடுதான் கியூபா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in