‘எவருடைய தவறு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு காரணமானது?’ -நேரு மீது அம்பு வீசும் அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்றும், அப்பகுதி மீதான கட்டுப்பாட்டை இந்தியா இழந்ததற்கு எவரோ ஒருவரின் பலவீனம் அல்லது தவறே காரணம் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான கட்டுப்பாட்டை இழந்ததில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை மறைமுகமாக குறிவைத்து, ’எவரோ ஒருவரின் பலவீனம் அல்லது தவறால் அது உருவானது’ என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் - சீனா
பாகிஸ்தான் - சீனா

'விஸ்வபந்து பாரத்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி ஒன்றில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் தொடர்பான சர்ச்சைக்குரிய வினாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட் பால்திஸ்தான் வழியாக சீனாவின் பொருளாதார வழித்தடம் செல்வதை சுட்டிக்காட்டிய அந்த கேள்வி, ”இந்தியா 'லட்சுமண கோட்டைத் தாண்டி' பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால், சீனாவின் எதிர்வினை என்னாகும்” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் 'லட்சுமணக் கோடு' என்ற கருத்தையே நிராகரித்தார். "லட்சுமணக் கோடு என்று எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என்றே நான் நினைக்கிறேன். யாரோ ஒருவரின் பலவீனம் அல்லது தவறு காரணமாக, அது தற்காலிகமாக நம்மிடமிருந்து நழுவிவிட்டது” என்று தெரிவித்தார். இந்த இடத்தில் மறைமுகமாக இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைமையை அவர் குற்றம்சாட்டினார்.

சீனாவுக்கான முன்னாள் தூதராக இருந்த ஜெய்சங்கர் பாகிஸ்தானுடனான சீனாவின் ஒத்துழைப்பையும், குறிப்பாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தைப் பற்றியும் விமர்சித்தார். “அந்த நிலத்தை பாகிஸ்தானோ, சீனாவோ தங்களுடையது என்று கூறவில்லை. இறையாண்மைஉள்ளவரே அதன் உரிமையாளர். இந்தியாவை அவர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள்; அங்கு எதையோ கட்டுகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

மத்தியில் ஆளும் பாஜக, 5ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தை பெரிதாக எழுப்பி வருகிறது. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிஜேபிக்கு 400 இடங்கள் என்பது சர்ச்சைக்குரிய பிரதேசத்தை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதை உறுதி செய்யும் என்று கூறினார். மேலும் இன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், ’எந்த விலை கொடுத்தேனும்’ அதை இந்தியா திரும்பப்பெறும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in