உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தனரா ரஷ்ய விண்வெளி வீரர்கள்?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வித்தியாசமான காட்சி
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தனரா ரஷ்ய விண்வெளி வீரர்கள்?

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு, ரஷ்யர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்ட, உக்ரைன் தேசியக் கொடியில் உள்ள மஞ்சள் மற்றும் நீல வண்ணத்திலான உடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருக்கும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் மூன்று பேர் மஞ்சளும் நீலமும் கலந்த வண்ணத்தில் சீருடை அணிந்திருந்திருந்தனர். இதையடுத்து, அவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்களா எனும் பேச்சு எழுந்திருக்கிறது.

கஜகஸ்தானில் ரஷ்யாவின் குத்தகையின் கீழ் இருக்கும் பைகானூர் ஏவுதளத்திலிருந்து, ரஷ்ய மத்திய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் சார்பில் நேற்று இரவு 8.55 மணி அளவில் சோயூஸ் எம்எஸ் -21 விண்கலம் ஏவப்பட்டது. அதில் பயணம் செய்த ஓலெக் அர்தெம்யேவ், டெனிஸ் மாத்வெயேவ் ஆகிய மூன்று ரஷ்ய வீரர்கள் பயணித்தனர். மூன்று மணி நேரப் பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் ரஷ்யக் குழு இது. அங்கு ஏற்கெனவே, ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், நான்கு அமெரிக்க வீரர்கள், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் தங்கி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நேற்று சென்ற ரஷ்ய வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொலியில் அவர்கள் முழுக்கவும் நீல வண்ணத்திலான சீருடை அணிந்திருந்தனர்.

எனினும், பூமியில் உள்ள தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் பேசியபோது, மஞ்சள் வண்ணச் சீருடை அணிந்திருந்தனர். அது குறித்து கேட்கப்பட்டபோது, “எந்த வண்ணத்தில் சீருடை அணிய வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க எங்களுக்கு சலுகை உண்டு. ஏதேனும் ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்தபோது நாங்கள் மஞ்சள் வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தோம்” என்று ரஷ்ய வீரர் ஓலெக் அர்தெம்யேவ் பதிலளித்தார்.

எனினும், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஞ்சள் வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தார்களா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. தங்களிடம் மஞ்சள் வண்ணத்தில் ஏராளமான சீருடைகள் இருந்ததாலேயே, அவற்றை அணிய முடிவெடுத்ததாக அர்தெம்யேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in