சத்தமா பேசாதவர சவுண்டா பேசவெச்சுட்டாங்க!

ஆர்ப்பாட்டத்தில் விஜயபாஸ்கர்...
ஆர்ப்பாட்டத்தில் விஜயபாஸ்கர்...

சத்தமில்லாமல் பேசி சவுண்டாக சம்பாதிப்பவர் என்றுதான் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை அதிமுக வட்டாரத்தில் கமென்ட் அடிப்பார்கள். அப்படிப்பட்ட சாந்த சொரூபி நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற, மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்துவிட்டார்.

முதல்வர் ஸ்டாலினை அவன் இவன் என்று அவர் ஏக வசனத்தில் பேசியதை பார்த்த அதிமுகவினர், ‘நம்ம  விஜயபாஸ்கரா இது?’ என்று சற்றே ஜர்க் ஆகிப்போனார்கள். அவரின் இந்த ஆக்ரோஷத்துக்கு அண்மையில், அவருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டுதான் காரணமாம். ஒருமுறை ரெய்டு நடத்தியபோது இது சகஜம்தான் என்று அமைதியாக இருந்தார். இரண்டாவது முறை சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் உட்பட அனைத்தையும் ஆய்வு செய்து அதுபற்றிய தகவல்களையும் வெளியில் பரப்பியது லஞ்ச ஒழிப்புத்துறை. அத்துடன் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி,  “இங்கிலாந்து இளவரசியின்  அரண்மனையை விட விஜயபாஸ்கரின் பங்களா பெரிதாக இருக்கிறது” என ஊடகங்களுக்கு லீடு கொடுத்தார். இதையெல்லாம் சேர்த்து வைத்துத்தான் புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் பொளந்துகட்டிவிட்டாராம் விஜயபாஸ்கர். இதற்காகவும் ஒரு ரெய்டு விட்டுடப் போறாங்க... கவனமா இருங்க முன்னாள் அமைச்சரே!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in