ஏறக்கட்டப்பட்ட ஏனாதி பாலு!

ஏறக்கட்டப்பட்ட ஏனாதி பாலு!

யாருக்காவது பதவி கொடுத்தால் அதற்காக ஸ்வீட் கொடுத்து கொண்டாடுவார்கள். ஆனால் தஞ்சை திமுக மக்கள், ஒருவரை பதவியை விட்டு தூக்கியதற்காக, ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என குஷியாகிக் கிடக்கிறார்கள். எக்ஸ் எம்எல்ஏ-வான ஏனாதி பாலுவை 2020-ல் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது தலைமை. அது முதலே கட்சியினரை அனுசரித்துப் போகவில்லை என்ற குற்றச்சாட்டு ஏனாதி மீது ஏகத்துக்கும் இருந்தது. இதனாலேயே இவருக்கு கடந்த தேர்தலில் பட்டுக்கோட்டையில் சீட் கொடுக்கவில்லை.

இருந்தாலும் இவரது எல்லைக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் திமுக வாகை சூடியது. அதனால் ஏனாதி பாலுவின் தலை அப்போது தப்பியது. ஆனால், அதன் பிறகும் பாலு பழையபடியே இருந்தாராம். இவரைப் பற்றி புதிதாக வந்த இரண்டு எம்எல்ஏ-க்களுமே தலைமையில் நல்ல ஒப்பீனியன் கொடுக்கவில்லையாம். இதனால் இப்போது ஏனாதியை ஏறக்கட்டிவிட்டு, பட்டுக்கோட்டை எம்எல்ஏ-வான அண்ணாதுரையையே தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறது திமுக தலைமை. வழக்கமாக, மாவட்ட செயலாளர் பதவியைவிட்டு எடுப்பவர்களை சமாதானப்படுத்த டம்மியாக ஏதாவதொரு பதவி கொடுப்பார்கள். அந்தக் கருணையும் பாலு மீது காட்டப்படவில்லையாம். ஏனாதி பாலு நீக்கத்தைத்தான் ஸ்வீட் எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தஞ்சை உடன்பிறப்புகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in