
நேற்று தமிழகமெங்கும் திமுகவினர் அண்ணா பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள். தஞ்சையிலும் அப்படித்தான் நினைத்து ஆட்களைத் திரட்டினார் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாநகர் திமுக செயலாளரான மேயர் சண்.ராமநாதன். ஆனால், கோஷ்டிப் பூசல்காரணமாக அவரால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேர்க்கமுடியவில்லை. இதனால், வழக்கம் போல கிராமங்களுக்கு ஆட்டோக்கள் அனுப்பி ஆட்களை அள்ளிவந்தார்கள். எதற்காக வந்திருக்கிறோம் என்று தெரியாமலே வந்திறங்கிய கிராம மக்களை நிகழ்ச்சி முடிந்ததும் சர்க்யூட் ஹவுஸுக்கு வரவைத்து பணத்தைப் பப்ளிக்காகவே எண்ணிக்கொடுத்தார்கள்.
அப்படியும் சிலருக்கு பேசியபடி ‘பட்டுவாடா’ நடக்கவில்லையாம். கூடுதல் ’கவனிப்பாக’, நிகழ்ச்சிக்காக திரட்டி வந்தவர்களுக்கு வடையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதிலும் பெரும்பகுதியை திமுகவினரே ‘சுட்டுக்கொண்டு’ போய்விட்டதால், “பேசினபடி பணமும் கொடுக்கல... வடையாச்சும் வரும்னு பார்த்தா அதுவும் போச்சா” என்று வடைச்சட்டி வைத்திருந்தவருக்கு பின்னால் கையேந்தியபடியே சென்ற மக்களைப் பார்த்தபோது கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது.