பாவம் தான் ப.சிதம்பரம்!

பாவம் தான் ப.சிதம்பரம்!

அண்மையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கொடிகூட கட்டப்படாமல் நடந்த இந்தக் கூட்டத்தில், ப.சிதம்பரமும் கலந்து கொண்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கரு.பாண்டிவேல், “வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள் செயல்பாடுகள் சரியில்லை. அவங்கள எல்லாம் மாத்தணும்” என்று கூட்டத்தில் இருந்து குரல் கொடுத்தார். “அதையெல்லாம் பிறகு பேசிக்கலாம்; உக்காருங்க” என்று ப.சிதம்பரம் சொன்ன பிறகும் அசரவில்லை அவர். இதனால் பொறுமையிழந்த ப.சிதம்பரம் மேடையைவிட்டு கீழே இறங்கி வந்து, “நான் வேணும்னா இங்க இருந்துக்கிறேன்... நீங்க போயி மேடையில உக்காந்து கூட்டத்த நடத்துங்க” என்றார். அதற்கும் சளைக்காத பாண்டிவேல், “உங்க இடத்துல எப்ப உக்காரணுமோ அப்ப உக்காருவேன். இப்ப நீங்களே போய் கூட்டத்த நடத்துங்க” என்று சொன்னாராம். இந்தச் சம்பவம் நடந்த அடிமறைவதற்குள், பாண்டிவேலை கட்சியைவிட்டு நீக்கிவிட்டார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி. இந்த விவகாரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தீயாய் பரவியதை அடுத்து, “சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேய்ந்துகொண்டே வருகிறது. ஒரு காலத்தில் 12 யூனியன் சேர்மன் பதவிகளை தக்கவைத்திருந்த கட்சிக்கு இப்போது ஒரே ஒரு யூனியன் சேர்மன்தான் இருக்கிறார். எனவே, மாவட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும்” என்று ஆங்காங்கே புகைச்சல் வெடித்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியும் மாவட்ட தலைவருக்கு கடிதம் கொடுத்திருக்கும் நிலையில், இது தொடர்பாக காங்கிரஸார் 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்துப் பெற்று பிரச்சினையை ராகுலின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு கோஷ்டி இறங்கி இருக்கிறது.

Related Stories

No stories found.