ஹாட் லீக்ஸ் - சிதம்பரத்துக்கு வந்த சோதனை!

ஹாட் லீக்ஸ் - 

சிதம்பரத்துக்கு வந்த சோதனை!
ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 2 வார்டுகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியது திமுக. காங்கிரஸுக்கு ஒதுக்கிய 4-வது வார்டில் தனபாக்கியம் என்பவர் போட்டியிடுகிறார். இங்கே பிரச்சாரத்துக்கு வந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பேச, கூட்டத்திலிருந்த ஒருவர், “இந்த வார்டுல சூரியனும் போட்டியிடுது கை சின்னமும் போட்டியிடுது. நாங்க யாருக்குங்கய்யா ஓட்டு போடுறது?” என்று கேட்டார். திகைத்துப் போன சிதம்பரம், “அப்படி இருக்க முடியாதே” என்று பதில் சொல்லிவிட்டு, அருகில் நின்ற காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரித்தார். அப்போதுதான், திமுக போட்டி வேட்பாளருக்கும் உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டிருக்கும் விஷயம் அவருக்கு தெரிந்திருக்கிறது. என்றாலும் சுதாரித்துக் கொண்ட சிதம்பரம், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அதிகாரபூர்வ வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர்தான். அவருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். உதயசூரியனில் போட்டியிடும் திமுக நண்பருக்கு தவறுதலாக கட்சி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு யாரும் தேர்தல் வேலை பார்க்கக்கூடாது என கட்சித் தலைமையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, உதயசூரியனில் போட்டியிடும் அந்த நண்பர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துவிட்டு விடைபெற்றார்.

Related Stories

No stories found.