முன்னாள் அமைச்சர் தமிழரசியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திட்டமிட்டு புறக்கணிப்பதாகச் சொல்லப்படும் நிலையில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கே.ஆர்.பெரியகருப்பனின் திருப்பத்தூர் தொகுதியில் மே 19-ம் தேதி நடைபெற்றது. மாவட்டத்தின் இன்னொரு திமுக எம்எல்ஏ-வான தமிழரசியும் இதில் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்ததும் பயணியர் விடுதியில் பெரியகருப்பன், சிறப்புப் பேச்சாளர் குத்தாலம் அன்பழகன் உள்ளிட்ட விஐபி-க்களுக்கு இரவு டிபன் ஏற்பாடு செய்திருந்தார்களாம். தமிழரசியும், திமுக சுற்றுச் சூழல் அணி செயலாளர் பூர்ணகலாவும் பயணியர் விடுதிக்குப் போயிருக்கிறார்கள். அதற்கு முன்னதாகவே அமைச்சர் உள்ளிட்டவர்கள் அறைக்குள் போய் அமர்ந்துவிட்டார்களாம். தமிழரசி வந்திருக்கிறார் என்றதும் அறையைவிட்டு வெளியே வந்த அமைச்சர், “அங்க உக்காந்து சாப்பிடுங்கம்மா” என்று வராண்டாவைக் காட்டினாராம். வேறு வழியில்லாமல், வராண்டாவில் பத்தோடு பதினொன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு முடித்த தமிழரசி, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். விஷயம் அறிந்து மறுநாள் காலையில் குத்தாலம் அன்பழகன் தமிழரசிக்கு போன்போட்டு, “என்னம்மா... சொல்லாமக்கூட கெளம்பீட்டீங்க” என்றாராம். அதற்கு, “அங்க எனக்கு என்ன மரியாதை நடந்துச்சுன்னு நீங்களும் பார்த்தீங்கள்ல... பட்டியலினத்து பெண் எம்எல்ஏ-வை எப்படி நடத்துறாங்கன்றத நேருல பார்த்த நீங்கதான் தலைமைக்கிட்ட சொல்லணும்” என்று தழுதழுத்துவிட்டாராம் தமிழரசி.