
ஒரு காலத்தில் சேலம் திமுக என்றாலே அது வீரபாண்டியார் தான். ஆனால், கட்சிக்குள்ளேயே அவ்வப்போது அவர் உரிமைக் குரல் எழுப்பியதால் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டார். அவரது வாரிசுகளும் இப்போது சேலம் அரசியலில் சொல்லிக் கொள்ளும் இடத்தில் இல்லை. இதனால், வீரபாண்டியார் பெயரைச் சொல்லவே பலரும் இப்போது தயங்குகிறார்கள். இப்போது சேலம் மாநகராட்சியில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்களில் வீரபாண்டியார் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். ஆனால், பதவியேற்ற பின் வீரபாண்டியாரின் எதிரணியைச் சேர்ந்த ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டவர்களும் அரங்கில் இருந்ததால் அவர்கள் யாருமே வீரபாண்டியார் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்தனர். ஆனாலும், வீரபாண்டியாரின் தீவிர விசுவாசியான ‘முரட்டு’ குணசேகரன் மட்டும் யாருக்கும் பயப்படாமல் “வீரபாண்டியாரை வணங்கி” எனக்கூறி பதவியேற்றுக் கொண்டார். இதைக் கேட்டதும் அங்கிருந்த திமுகவினர் “குணசேகரன்தான்யா தில்லான ஆளு” என்று ராஜேந்திரன் காதுபடக் கூறிச் சென்றார்களாம்.