நரியூருக்குப் பயந்து புலியூருக்குப் போன கதையாக..!

டி.கே.ஜி.நீலமேகம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தபோது...
டி.கே.ஜி.நீலமேகம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தபோது...

மற்ற மாவட்டங்களைப் போலவே தஞ்சையிலும் திமுக கோஷ்டிகளுக்கு பஞ்சமே இருக்காது. இதை முறியடிக்க திமுக தலைமையும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும். ஆனாலும் கோஷ்டிகள் கொடுக்கைத் தூக்கிக்கொண்டு அலைவது ஓய்ந்தபாடில்லை. அப்படித்தான் தஞ்சை மாநகர திமுக செயலாளராக இருந்த டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ-வுக்கு எதிராக ஆளாளுக்கு அம்புகளை வீசினார்கள். இதனையடுத்து, அவரை மாநகரச் செயலாளர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கிய திமுக தலைமை, அந்தப் பொறுப்பை மேயர் சண்.ராமநாதனிடம் வழங்கியது. புதிதாக கட்சிப் பொறுப்புக்கு வந்த சண்.ராமநாதன் தன் பங்குக்கு இப்போது கோஷ்டி அரசியலை ஆரம்பித்துவிட்டாராம். இதனால், ஏற்கெனவே நீலமேகத்துக்கு எதிராக புகார் கிளப்பியவர்கள், “இதென்னடா... நரியூருக்குப் பயந்து புலியூருக்குப் போன கதையாப் போச்சு” எனப் புலம்புகிறார்களாம்.

இந்த நிலையில், இன்று அண்ணா பிறந்த நாளையொட்டி தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரான துரை சந்திரசேகரன், சண்.ராமநாதன் உள்ளிட்டவர்கள் தனி அணியாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்கள். நீலமேகத்தை இவர்கள் அழைக்கவில்லையா... அல்லது இவர்களோடு வருவதற்கு அவர் பிரியப்படவில்லையா எனத் தெரியவில்லை. ராமநாதன் கோஷ்டியினரின் ஆர்ப்பாட்டங்கள் முடிந்த பிறகு தனது ஆட்களோடு தனியாக வந்து அண்ணாவுக்கு மரியாதை வைத்துவிட்டுப் போனார் நீலமேகம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in