தள்ளிவிட்ட அண்ணாச்சி... தகித்தெழுந்த தங்கம்!

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தனது ஆளுகைக்குள் வரும் சிவகாசியில் திமுக மேயரை உட்காரவைக்க ரொம்பவே மெனக்கிட்டாராம் அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசு. 48 வார்டுகளைக் கொண்ட சிவகாசி மாநகராட்சியில் திமுக 24 வார்டுகளை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் 6 இடங்களை வென்றது. மேயரை வென்றெடுக்க போதிய பலமிருந்தும், அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரை பெருந்தொகை செலவழித்து திமுகவுக்கு இழுத்துவிட்டார் தங்கம். இவரது மூவ் இப்படி இருக்க, மாவட்டத்தின் இன்னொரு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி, சிவகாசி மேயர் பதவியை காங்கிரஸுக்கு தள்ளிவிட மறைமுகமாக காய்நகர்த்தினாராம். கூட்டணி கட்சிகளுடன் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் எ.வ.வேலுவும் கே.என்.நேருவும் இந்த உள்குத்து தெரியாமல் சிவகாசியை காங்கிரசுக்கு ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுவிட்டார்களாம். விஷயம் தெரிந்ததும் தகித்தெழுந்த தங்கம், “சிவகாசியில் திமுக மேயரை உட்காரவைப்பது எனக்கு மானப் பிரச்சினை. அது நடக்காமல் போனால் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யக்கூட தயங்கமாட்டேன்” என்று சீறிவிட்டாராம். இதையடுத்தே எழுதிய ஒப்பந்தம் மாற்றி எழுதப்பட்டு காங்கிரசுக்கு 2 கவுன்சிலர்கள் மட்டுமே உள்ள கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவி ஒதுக்கப்பட்டதாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in