முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஓபிஎஸ் சைடில் கரை ஒதுங்கிவிட்டதால் அவரது தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் அணியில் பலபேர் முட்டிமோத ஆரம்பித்திருக்கிறார்கள். தெற்கு மாவட்டத்தில் அதிமுக பெருந் தலைகளுக்கு பஞ்சமில்லை. அதனால் போட்டிக்கும் குறைச்சல் இல்லை. முன்னாள் எம்எல்ஏ-க்களான சி.வி.சேகர், திருஞான சம்பந்தம், கோவிந்தராஜ் ஆகியோர் தங்களுக்கே மா.செ பதவி என்ற மிதப்பில் வலம் வருகிறார்கள். இதுநாள் வரை வைத்தியின் கைபாணமாக இருந்த ஒரத்தநாடு காந்தி தனக்கே மா.செ பதவி கிடைக்கும் என மனப்பால் குடிக்கிறார். இவர்களுக்கு மத்தியில், எஸ்.பி.வேலுமணியிடம் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் பறைசாற்றி தனக்கே மா.செ பதவி என மினு மினுப்புக் காட்டுகிறார் மெடிக்கல் சரவணன். இவர்களெல்லாம் இருந்த இடத்திலிருந்தே வாயால் வடை சுட்டுக்கொண்டிருக்க, மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் துரை செந்தில், ஓசைப்படாமல் ஒரு எட்டு சென்னைக்கே சென்று எடப்பாடியாரைச் சந்தித்து எதிர்பார்ப்பைப் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம். இந்த விஷயம் தெரிந்து, முன்னாள் குடிசைமாற்று வாரியத் தலைவர் தங்கமுத்துவின் தம்பி ராஜமாணிக்கமும் முன்னாள் அமைச்சர் காமராஜை கார்னர் பண்ண ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படி ஆளாளுக்குப் போட்டிபோடுவதால் இதில் யாருக்கு பதவி கொடுத்தாலும் மற்றவர்கள் வைத்தி வீட்டு கதவைத் தட்டலாம் என்பதால் விஷயத்தை கீப்பில் வைத்திருக்கிறாராம் ஈபிஎஸ்.