செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் செந்தில்நாதன்!

செந்தில்நாதன், செந்தில்பாலாஜி
செந்தில்நாதன், செந்தில்பாலாஜி

சொந்த மாவட்டமான கரூரில் தன்னை யாரும் அசைக்கமுடியாது என்ற தைரியத்தில் கோவை மாவட்டத்தையே சுற்றிச் சுற்றி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த நான்கு நாட்களாக கரூரையே சுற்றிச் சுற்றி வருகிறார். அதற்குக் காரணம், கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செந்தில்நாதனும் அதிமுகவில் இருந்தவர் தான். அதனால் பாலாஜி பாலிடிக்ஸில் பாதிக்கும் மேல் செந்திலுக்கும் அத்துபடி. செந்தில் பாலாஜிக்கு அதிமுகவில் சற்றே இறங்குமுகம் தெரிந்தபோது தனி ரூட்டில் பயணித்து ஜெயலலிதாவை பர்சனலாகச் சந்தித்தவர் செந்தில்நாதன். இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் அதிமுகவின் இளைஞர் - இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளராக வந்தார் செந்தில்நாதன். அந்த அளவுக்கு அரசியல் சூட்சுமங்களைப் படித்த செந்தில்நாதனை செந்தில் பாலாஜியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பாஜகவில் சேர்த்து அவருக்கு மாவட்ட தலைவர் பதவியும் வழங்கினார் அண்ணாமலை. அவரது திட்டம் இப்போது நன்றாகவே வேலை செய்கிறது.

இப்போது செந்தில் பாலாஜிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் செந்தில்நாதன். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என கரூர் மாவட்டம் முழுவதும் நீக்கமற நிறைந்திருந்தது பாஜகவினர் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள்.  அவர் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டமும் அறிவித்திருந்தது பாஜக. இதையெல்லாம் திடமிட்டு ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்றி வருவது செந்தில்நாதனாம். அடுத்த நகர்வாக, திமுக, அதிமுகவில் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால் ஓரங்கட்டப்பட்ட கழகக் கண் மணிகளை தேடிப்பிடித்து பாஜகவுக்கு திருப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் செந்தில்நாதன். ஏற்கெனவே அதிமுகவில் இருந்த இவருக்கு பாஜகவுக்குப் போன பிறகு ஏற்பட்ட ஏறுமுகத்தைப் பார்த்துவிட்டு இரண்டு கட்சிகளிலும் பலரும் இப்போது சலனப்பட ஆரம்பித்திருக்கிறார்களாம். இதையெல்லாம் அறிந்தே, தற்போது கரூரைச் சுற்றிவரும் செந்தில் பாலாஜி, பகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை வரவைத்துப் பேசிவருகிறாராம். ”இதுவே எங்களுக்கிடைத்த முதல் வெற்றிதான்” என்று சொல்லும் கரூர் பாஜககாரர்கள், “இன்னதுதான் செய்வார் என செந்தில் பாலாஜியை அவ்வளவு எளிதாகக் கணித்துவிட முடியாது. ஆனால், அவர் என்னவெல்லாம் செய்வார் என்பது செந்தில்நாதனுக்கும் முக்கால்வாசி தெரியும். அதனால் தான் பாலாஜிக்கு இப்போது பயம் வந்துவிட்டது” என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in