
கரூர் நகர் (வடக்கு) அதிமுக செயலாளராக இருந்தவர் லாட்டரி வியாபாரி பாண்டியன். இவர் மீது பல வழக்குகள் உண்டு. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளரான இவர், திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அறிவாலயத்தில் பிரசன்னமான பாண்டியன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். பாதுகாப்பான இடத்தைத் தேடிக்கொண்டதால் இப்போது கரூருக்குள் கம்பீரமாக வலம்வருகிறார் பாண்டியன். இந்த நிலையில், மாவட்ட ஊராட்சியின் அதிமுக கவுன்சிலரான அலமேலுவின் கணவர் மனோகரன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களையும் இணைத்துப் பேசும் கரூர் திமுகவினர், “தான் சொன்னதக் கேட்டா செம்மையா இருக்கலாம். கேக்காட்டா... ஜெயிலுக்குத்தான் போகணும்னு செந்தில் பாலாஜி சிறப்பா காட்டிட்டாரு பாத்தீங்களா” என்று சொல்கிறார்கள்.