
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மறு விசாரணையில் விறு விறு என வேகம் காட்டிய போலீஸ் அண்மை நாட்களாக கப் சிப் ஆகிவிட்டது. இதற்கான காரணம் அதிமுகவினருக்கே விளங்கவில்லை. இந்நிலையில், எடப்பாடியார் சம்பந்தப்பட்ட சில தஸ்தாவேஜுகள் கோடநாடு பங்களாவில் சசிகலாவின் பொறுப்பில் இருந்ததாம். அதைக் குறிவைத்தே கொள்ளைச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது என சேலத்துப் பக்கம் சிலர் கொளுத்திப் போடுகிறார்களாம். அதிமுக ஆட்சியில் எடப்பாடியாருக்கு எல்லாமுமாக இருந்த சேலம் இளங்கோவன் சம்பந்தப்பட்ட இடங்களில், அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இந்த நிலையில், எடப்பாடியார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கோடநாட்டிலிருந்து சேதாரம் இல்லாமல் கொண்டுவர முக்கியமான சிலரிடம் இளங்கோவன் பேரம் பேசியதாக, கோடநாடு வழக்கின் மறு விசாரணையில் போலீஸுக்கு துப்புக் கிடைத்திருக்கிறதாம்.