வாய்தவறிய திண்டுக்கல்லார்... வறுத்தெடுக்கும் ஓபிஎஸ் டீம்!

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவை கொங்கு திமுகவாக மாற்றிவிட்டார்கள் என ஈபிஎஸ் தரப்பினர் மீது புகார்வாசிக்கப்படும் நிலையில், அந்த லேபிளை மறைக்க ரொம்பவே பிரயத்தனப்படுகிறாராம் ஈபிஎஸ். இந்த விஷயத்தில் பாவம்... ஆர்.பி.உதயகுமார் தான் ரொம்பவே வாங்குப்படுகிறாராம். தென் மாவட்டத்தில் இருந்துகொண்டு அதுவும் தேவர் சமூகத்தவராய் இருந்து கொண்டு ஈபிஎஸ் பக்கம் நிற்பது அவருக்குத் தான் தர்மசங்கடமாய் இருக்கிறதாம்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இந்த நிலையில், தேவர் சமுதாயத்தை நாங்கள் என்றைக்குமே கைவிடமாட்டோம் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக அந்த சமூகம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளை உதயகுமார் மூலமாகவே கவனித்து வருகிறாராம் ஈபிஎஸ். அப்படித்தான் பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்வுக்கு படை திரட்டினார்கள். அதேபோல் இன்று, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வழித்தோன்றலான பி.கே.மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்காக உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி., ஒரு பெரும் படையையே கூட்டி வந்து அஞ்சலி செலுத்தினார். இதற்குப் போட்டியாக தங்கள் தரப்பில் ஆட்களைத் திரட்டினார் உதயகுமார். அதன்படி திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட தலைகள் மூக்கையா தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். வந்த இடத்தில் சும்மா இருக்காமல் வழக்கம் போல வாய்திறந்த திண்டுக்கல் சீனிவாசன், மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாள் என்பதற்குப் பதிலாக 100- வது நினைவு நாள் என்று தடம் புரண்டார். இந்த வீடியோவை அப்படியே எடுத்து வலைதளத்தில் போட்டு ‘எவ்வளவு பெரிய தலைவருக்கு அஞ்சலி செலுத்தச்செல்கிறோம் என்பதுகூட தெரியாமல் எடப்பாடியின் கோமாளிகள் செய்யும் காமெடியைப் பாருங்கள்...’ என்று கிண்டலடித்து வருகிறது. ஓபிஎஸ் கோஷ்டி. அடுத்ததாக, தேவர் ஜெயந்திக்கு என்ன சப்ஜெக்ட் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in