
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்காக நான்கு நாள்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளார் ராகுல் காந்தி. இதன் தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே செய்தியாளர் களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ராகுல் நடைபயணத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே, நடைபயணத்தின் ஊடாக ஆங்காங்கே சில முக்கிய ஆளுமைகளையும் சந்திக்கிறார் ராகுல்.
அவர்களிடம் கடந்தகால காங்கிரஸ் அரசின் தவறுகளுக்கும் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கும் ராகுல்காந்தி, காங்கிரஸ் இனி என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை கேட்டு வருகிறாராம். சில நடுநிலையாளர்கள் பொதுவெளியில் ஊடக வெளிச்சத்துக்கு மத்தியில் ராகுலை சந்திக்கத் தயங்குவார்கள் என்பதாலேயே இந்தப் பயணத் திட்டத்தில் ஊடகங்களுக்கு பாஸ் வழங்கப்பபடவில்லை என்கிறார்கள். ராகுலை நேரில் சந்திக்கும் பட்டியலில் மேதா பட்கர் தொடங்கி அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் வரை பெரும் பட்டியல் இருக்கிறதாம். இதற்காகவே மேதா பட்கரும் குமரியில் முகாமிட்டுள்ளார். உள்ளூர் அளவிலான சமூக ஆர்வலர்களையும் மிஸ் செய்யவேண்டாம் எனவும் காங்கிரஸாரிடம் வலியுறுத்தி இருக்கிறாராம் ராகுல் காந்தி.