நவம்பருக்குள் நமச்சிவாயம் சிஎம்?

காவல் அதிகாரிகளுடன் நமச்சிவாயம்...
காவல் அதிகாரிகளுடன் நமச்சிவாயம்...

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் சொல்வதை அதிகாரிகள் அப்பீல் இல்லாமல் அப்படியே கேட்கிறார்களாம். முதல்வர் ரங்கசாமி எந்த உத்தரவு போட்டாலும், “ஹோம்கிட்ட (உள்துறை அமைச்சர்) ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே” என்கிறார்களாம் அதிகாரிகள். உள்துறை மற்றும் கல்வி என இரண்டு அதிமுக்கிய துறைகளை வைத்திருக்கும் நமச்சிவாயம், அந்தளவுக்கு ஆட்சியில் செல்வாக்குடன் இருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி பேசியபோதே ஆட்சியின் இரண்டரை ஆண்டுகளை பாஜகவுக்கு விட்டுத் தருவதாக ரங்கசாமி உத்தரவாதம் அளித்திருந்தாராம். ஆனால், சொன்னபடி அவர் அப்படி நடந்துகொள்வாரா அல்லது ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு டாட்டா காட்டியதுபோல் செய்துவிடுவாரா என்ற சந்தேகம் பாஜக தலைவர்களுக்கு இப்போது வந்துவிட்டதாம். அதனால், இப்போதே ரங்கசாமியை இறக்கிவிட்டு நமச்சிவாயத்தை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க காய்நகர்த்தப்படுகிறதாம்.

ரங்கசாமி
ரங்கசாமி

இந்த நிலையில், தனது ஜாதகா பலன் குறித்து சென்னை அம்பத்தூரில் இருக்கும் தனது ஆஸ்தான ஆன்மிக குருவிடம் அண்மையில் ஆலோசனை கேட்டாராம் நமச்சிவாயம். “கடக ராசி, பூரம் நட்சத்திரக்காரரான உங்களுக்கு இப்போது ராஜயோகம் இருக்கிறது. எனவே, இந்த நவம்பருக்குள் எப்படியாவது முதல்வர் அரியணையில் அமர்ந்துவிடுங்கள். அதன்பிறகு உங்களை யாரும் அசைக்கமுடியாது. இதைத் தவறவிட்டால், அடுத்த தேர்தலிலும் உங்களுக்கு முதல்வராகும் யோகம் அமையாது. காலத்துக்கும் உங்களது மாமனாருக்கு (ரங்கசாமிக்கு) எதிரில் கைகட்டி நிற்கவேண்டியது தான்” என்று சொன்னாராம் ஆஸ்தான ஆன்மிக குரு.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 எம்எல்ஏ-க்களில் பாஜகவுக்கு நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 9 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். சுயேச்சைகள் இருவர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு இன்னும் ஐந்து எம்எல்ஏ-க்களை வளைத்தால் போதும் என்பதால் இன்னும் சில சுயேச்சைகளுக்கும், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கும் தூண்டில் வீச தயாராகி வருகிறதாம் பாஜக தலைமை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in