சேதுக்கரையில் ப.சிதம்பரம் யாகம் நடத்தியது எதற்காக?

ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில்...
ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில்...

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸின் ஜி23 தலைகளை பின்னால் இருந்து இயக்குவதாக சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். ஆனால் சிதம்பரமோ, ராகுல் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். அதேசமயம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், “காங்கிரஸில் ஜனநாயகம் தழைக்க வேண்டும்” என்கிறார். ஒருவகையில் பார்த்தால் கார்த்தி உள்ளிட்டவர்கள் ராகுலுக்குப் பதிலாக வேறொருவர் தலைவராக வந்தால் நல்லது என்ற சிந்தனை ஓட்டத்தில் இருக்கிறார்கள். இது காந்தி குடும்பத்து விசுவாசிகளை எரிச்சலூட்டி வருகிறது. இந்தநிலையில், சிதம்பரம் தனது 77-வது பிறந்த நாளை செப்டம்பர் 16-ம் தேதி கொண்டாடினார். எப்போதுமே தனது பிறந்த நாளை ஊரைக்கூட்டி கொண்டாடுவது சிதம்பரத்துக்கு வழக்கமில்லை. அதுபோலவே இந்த வருடத்தையும் கடந்தார். ஆனால், பிறந்த நாளைக் கொண்டாடிய கையோடு ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில் உள்ள ஏகாந்த சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி இருக்கிறார் சிதம்பரம். செப்டம்பர் 19, 20 இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இந்த யாகத்தில் சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்களாம். ராமபிரான் யாகம் நடத்தியதாகச் சொல்லப்படும் இங்கு எதற்காக சிதம்பரம் குடும்பத்தினர் யாகம் நடத்தினார்கள் என்ற விவரம் உறுதியாகத் தெரியாத நிலையில், சிதம்பரம் காங்கிரஸ் தலைவராக வரவேண்டியும் வழக்குகளில் இருந்து விடுபட வேண்டியும் இந்த யாகம் நடத்தப்பட்டதாக ஒரு தகவல் தடதடக்கிறது.

சிதம்பரத்தின் சிவகங்கைக்காரர்களோ, “சிதம்பரம் தனது முன்னோர்களுக்கு சரியானபடிக்கு திதி கொடுக்காமல் விட்டுவிட்டார். அதனால் சில தோஷங்கள் இருந்தது. அதைக் கழிக்கவே மகாளய பட்ச நாளில், ராமபிரான் வழிபட்ட சேதுக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்திருக்கிறார் சிதம்பரம். அதையொட்டி கோயிலிலும் யாகம் நடத்தப்பட்டிருக்கலாம்” என்கிறார்கள். இதனிடையே சற்று முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘(சேதுக்கரை அருகிலுள்ள) திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பேருமாள் கோயிலில் வழிபாடு நடத்தினேன். தசரத சக்கரவர்த்தி நான்கு மகன்களைப் பெற்றபிறகு வந்து வழிபாடு நடத்திய திருத்தலம் இது’. என்று படத்துடன் தகவல் பகிர்ந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in