ஓபிஎஸ்சை மிரட்டும் மிலானி!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

சொத்துகளை மறைத்தும், தவறான கல்வித் தகுதியை குறிப்பிட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாக ஓபிஎஸ்ஸுக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்பிக்கும் எதிராகப் புயலைக் கிளப்பி இருக்கிறார், பொறியாளர் மிலானி. தேனிமாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மிலானி, திமுக இளைஞரணி பொறுப்பில் இருந்தவர் என்கிறார்கள். இந்த விவகாரத்தில், ஓபிஎஸ் மீதும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் தேனி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார் மிலானி. இருவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.

இது விஷயமாக நம்மிடம் பேசிய மிலானி, “அரசியலில் உயர்ந்த நிலைக்கு வந்ததும் சிலபேர் தங்களின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக பெயருக்குப் பின்னால், படிக்காமலே டிகிரிகளை போட்டுக்கொள்வது சகஜமாகிவிட்டது. உத்தமபாளையம் கல்லூரியில் பி.ஏ படிப்பில் சேர்ந்த ஓபிஎஸ், அதை முடிக்கவில்லை. அப்படியிருக்கையில் வேட்புமனுவில், பி.ஏ என்று போட்டு அதற்கு மேலே சின்னதாய் இரு கோடுகள் போட்டிருக்கிறார். கல்யாணப் பத்திரிகையிலும் போஸ்டர்களிலும் வேண்டுமானால் பெருமைக்காக இப்படி போட்டுக் கொள்ளலாம். ஆனால், சட்டப்படி தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுவில் இப்படி எல்லாம் கோடு போடமுடியாது.

அதிகபட்ச கல்வித் தகுதி என்றுதான் அதில் கேட்டிருக்கிறது. அதில் நாம் எந்தப் படிப்பை முழுமையாகப் படித்து முடித்திருக்கிறோமோ அதைத்தான் போடமுடியும். அரைகுறை படிப்பையெல்லாம் போட்டால், அது பொய்யான தகவல்தான். எனவே, இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் தண்டிக்கப்படுவது நிச்சயம்” என்றார். சொல்வதைப் பார்த்தால், இந்த வழக்கு ஓபிஎஸ்சுக்கு குடைச்சல் கொடுக்கும்தான் போலிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in