வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு, அவரது சொந்தபந்தங்கள் வேட்டுவைக்காமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது. அமைச்சரின் உறவினரும் ஒன்றிய செயலாளருமான ஒருவர், வேளாண் அதிகாரிகளை வெளியூர்களுக்கு அதிரடியாய் பணியிட மாற்றம் செய்யவைக்கிறாராம். திரும்பவும் அதே இடத்துக்கு வரவேண்டுமென்றால், வேறு மாதிரியாக டீல் பேசுகிறார்களாம். மாவட்டம் முழுக்க, டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு ஏற்றும் லாரி கான்ட்ராக்டையும் ஒன்றியமே கச்சிதமாய் பிடித்து வைத்திருக்கிறாராம். இவர் இப்படி என்றால்... கோயில் நகரத்தின் செயலாளரும், அமைச்சரின் நெருங்கிய உறவினருமான ஒருவர், தான் சொன்னதைக் கேட்காத பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரை தனது வீட்டுக்கே வரவழைத்து, முட்டிபோட வைத்ததாக ஒரு பகீர் சர்ச்சை வெடித்திருக்கிறது. நெய்வேலியில் அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர், கட்சியில் பதவி வாங்கித் தருவதாகச் சொல்லி உடன்பிறப்பு ஒருவரிடம் 16 லட்சத்தைப் பக்குவமாய் கறந்த கதையும் இப்போது அறிவாலயத்தை எட்டி இருக்கிறதாம். எஞ்சிய காலத்துக்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ!