அமைச்சர் தரப்பு மருத்துவமனை... ஆட்சேபிக்கும் அதிமுக!

நாசர்
நாசர்

பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா. இவரது மனைவியின் தங்கை ஒரு மருத்துவர். இவருக்காக அமைச்சர் நாசரின் குடும்பத்தினர் ஆவடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றைக் கட்டிவருகிறார்கள். பருத்திப்பட்டு பகுதியில் மருத்துவமனை கட்டப்பட்டு வரும் அந்த இடம் குடிசைமாற்று வாரியத்துக்குச் சொந்தமான அரசு (நீர்நிலை) புறம்போக்கு நிலமாம். பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்தை மருத்துவமனை கட்ட 50 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறார்களாம். அமைச்சர் நேரடியாகத் தலையிடாமல், ‘நம்பிக்கையானவர்கள்’ பெயரில் இந்தக் குத்தகை எடுக்கப்பட்டி ருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து சர்ச்சை கிளப்பும் அதிமுகவினர், “ஆவடி பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம், காவல் துணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் நிலையில் அமைச்சர் தரப்புக்கு இந்த இடத்தை ஒதுக்கியது எப்படி? எங்கள் ஆட்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்த கட்டிடத்துக்கு அனுமதி கொடுக்காமல் கிடப்பில் வைத்திருந்தார். ஆட்சி மாறியதும் விதிமுறைகளை இஷ்டம் போல் தளர்த்தி மருத்துவமனையை எழுப்பி வருகிறார்கள். நீர்நிலைப் புறம்போக்கில் எவ்வித ஆக்கிரமிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது. இதைச் சுட்டிக்காட்டி யாராவது கோர்ட்டுக்குப் போனால் டப்பா டான்ஸ் ஆடிவிடும்” என்கிறார்கள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in