எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்!

எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்!
கே.ஆர்.ராமசாமி, கே.எஸ்.அழகிரி, கே.சி.வேணுகோபால்

சிவகங்கை காங்கிரஸில் யாரும் ப.சிதம்பரத்தை நேருக்கு நேராய் எதிர்த்து நிற்கமாட்டார்கள். மரியாதை ஒரு காரணம். இன்னொரு காரணம், பயம். ஆனால், இப்போது அந்த பயம், மரியாதை எல்லாம் மலையேறிவிட்டது. சிதம்பரத்துக்கு எதிராக, முன்னாள் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி தரப்பினர், ஆங்காங்கே ஒன்றுகூட ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களுக்கெல்லாம் சிதம்பரத்தின் மீது கோபம் இல்லை என்றாலும், கார்த்தி சிதம்பரம் மீது அத்தனை கோபம் இருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் டெல்லி சென்ற கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபாலைச் சந்தித்துப் பேசினாராம். அப்போது, “உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாராம் வேணுகோபால். அதற்கு, “என்னை 6 முறை எம்எல்ஏவாக்கி விட்டீர்கள். இப்போது என் மகனை எம்எல்ஏவாக்கி இருக்கிறீர்கள்; இதுபோதாதா? இனிமேல் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். ஆனால், வேலை கொடுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன்” என்று சொன்னாராம். பதவிக்காக டெல்லியை மோதும் காங்கிரஸ்காரர்களையே பார்த்துப் பழகிப்போன வேணுகோபால், இதைக் கேட்டதும் இப்படியும் ஒரு மனிதரா என அதிசயித்துப் போனாராம். இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான சிபாரிசு பட்டியலில் ராமசாமியின் பெயரும் இருப்பதாக, சிவகங்கை பக்கம் பிரேக்கிங் நியூஸ் ஓட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.