ஆகஸ்ட் 3-ம் தேதி, மக்களவையில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். முக்கியமாக, திமுக எம்பி-க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அந்த சமயத்தில், காங்கிரஸ் எம்பி-க்களான சசி தரூரும், கார்த்தி சிதம்பரமும் தங்களின் இருப்பிடத்தைவிட்டு நகராமல் எழுந்து நின்றார்களாம். இதை கூர்ந்து கவனித்த திமுக குடும்பத்து எம்பி ஒருவர், சோனியாவிடமே போய் இதைப் புகாராகவே வாசித்தாராம். இதைக் கேட்டுவிட்டு, “நானே வருகிறேன்” என்று தனது இருக்கையைவிட்டு எழுந்தாராம் சோனியா. ஆனால், “உடல் நிலை சரியில்லாத நீங்கள் எழுந்திருக்க வேண்டாம்” என்று மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரைத் தடுத்துவிட்டார்களாம். இத்தனைக்கும் பிறகுதான் கார்த்தியும் தரூரும் அவையின் மையப் பகுதிக்குச் சென்று குரல்கொடுத்தார்களாம். இந்தச் சம்பவத்தை வைத்து, கார்த்தியும் சசி தரூரும் பாஜக அரசை எதிர்க்கும் விஷயத்தில் பவ்யம் காட்டுவதாக கட்சிக்குள்ளேயே சிலர் சிண்டு முடிகிறார்களாம்.