ராகுலுக்கு செக் வைக்கிறாரா கார்த்தி சிதம்பரம்?

ராகுலுக்கு செக் வைக்கிறாரா கார்த்தி சிதம்பரம்?

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களைத் தாண்டி பொதுமக்களையும் கட்சித் தொண்டர்களையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசவேண்டும் என்று குரல்கொடுத்த கார்த்தி சிதம்பரம், “இது கட்சி நடத்தும் நிகழ்ச்சியாகத் தெரியவில்லை. ராகுலை சுற்றி இருப்பவர்கள் நடத்தும் நிகழ்ச்சி போல இருக்கிறது” என்று விமர்சித்தாராம். “கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தாமல் இந்த நடை பயணம் தேவையற்றது” என்றும் தனக்கு நெருக்கமானவர் களிடம் பேசிய கார்த்தி, கட்சி தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்குக்கு கடிதம் எழுதி இருக்கிறாராம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் சசி தரூரை ஆதரிக்கும் மனநிலையில் கார்த்தி உள்ளிட்டவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை, ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் ஒதுங்கினால் தனக்கு விசுவாசமான ஒருவரை தலைவர் பதவிக்கு அவர் முன்னிறுத்தலாம் என்ற பேச்சு அடிபடும் நிலையில், யாராக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தான் தேர்வு செய்யப்படவேண்டும் என்று ஆரம்ப நிலையிலேயே கார்த்தி உள்ளிட்டவர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

இதையெல்லாம் கடுமையாக விமர்சிக்கும் கார்த்தியின் சிவகங்கை தொகுதி காங்கிரஸ்காரர்கள் சிலர், “நான்கு ஆண்டுகளாக தங்களது சொந்த மாவட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்தமுடியாதவர்கள் எல்லாம் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். இன்றைக்கு ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் எம்பி-க்களாக இருக்கிறார்கள் என்றால் அது நேரு குடும்பம் கொடுத்த வாய்ப்பு. அப்படி இருக்கையில், தலைவர் ராகுல் காந்தி சொல்வதைப் போல, காங்கிரசில் சில இரண்டாம்கட்ட தலைவர்கள் வழக்குகளுக்கும் பாஜகவுக்கும் பயந்தே பேசுகின்றனர். நேரு குடும்பம் என்றைக்கும் குறுக்கு வழியை நாடாது; தேடாது. தேர்தல் முறையாகவே நடக்கும். ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவர். அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்கள் அவரையே விரும்புகிறார்கள். சிவகங்கையில் இருந்து தேர்வாகும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களும் ராகுல் காந்திக்கே வாக்களிப்பார்கள்” என்று வாட்ஸ் - அப்பில் பதிவுகளைப் போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in