ராகுல் வரும்போது ரகளை செய்யக் காத்திருக்கும் ராஜன்!
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜன் தீவிரமான காங்கிரஸ்காரர். ஒரு காலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பில் இருந்தவர். இதற்காக காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் பதவியையே உதறிவிட்டுப் போனவர். ரஜினி தனது அரசியல் கடையை திறக்காமல் போனதால், “ரஜினியால் எனது அரசியல் வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போச்சு” என பஞ்ச் டயலாக் பேசிய ராஜன், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே (காங்கிரசுக்கு) திரும்பி வந்தார். அதன் பிறகும் அதிரடிகளுக்குப் பஞ்சம் வைக்காதவர், “கட்சியை வழிநடத்தத் தெரியாதவர்” என மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையே அட்டாக் செய்தார். ஆனாலும் அழகிரியால் இவரை கட்சியைவிட்டு நீக்க முடியவில்லை. காரணம், இவர் தன்னை கார்த்தி சிதம்பரம் ஆதரவாளராகக் காட்டிக்கொண்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க ஒரே வழி கார்த்தி சிதம்பரத்தை மாநிலத் தலைவர் ஆக்குவதுதான் என வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளார் ஆர்.எஸ்.ராஜன். தனது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக திடீரென நாளிதழ்களில் விளம்பரங்களையும் கொடுத்து அழகிரி வட்டாரத்துக்கு திகிலூட்டி இருக்கிறார் மனிதர்.
இதுபற்றி கேட்டால், “கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் ராகுல் காந்தி யாத்திரை தொடங்குகிறார். அப்போது இது விஷயமாக அவரிடம் நேரிலேயே மனு கொடுக்கப் போகிறேன். ராகுல் வரும் அதே நாளில் எனது இந்தக் கோரிக்கையை குமரி மாவட்டம் முழுமைக்கும் போஸ்டராக அடித்து ஒட்டவும் இருக்கிறேன். எனது கோரிக்கை மனுவைப் படிக்காது போனாலும் போஸ்டரைப் பார்த்தாவது ராகுல் காந்தி புரிந்துகொள்ளட்டும். காங்கிரஸில் இருப்பதே பெருமை... அதற்கு கார்த்தி சிதம்பரமே தகுதியான தலைமை” என்று ரகளையாகப் பேசுகிறார் ராஜன்.