கடத்திக் காசாக்கிய களஞ்சியம்!

கடத்திக் காசாக்கிய களஞ்சியம்!

காரைக்குடி அருகேயுள்ள நாச்சியார்புரத்தில், டெக்ஸ்டைல் மில் கட்டிடம் ஒன்றை ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளரும் ப.சிதம்பரத்தின் விசுவாசியுமான களஞ்சியம், சிதம்பரம் என்பவருக்கு விலைபேசி முடித்துக் கொடுத்தாராம். ஆனால், ஒரு சில ஆவணங்கள் கைக்கு வராமல் இருந்ததால், களஞ்சியத்துக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன் தொகையை கொடுக்காமல் நிறுத்தி வைத்தாராம் சிதம்பரம். இதனால், டெக்ஸ்டைல் மில்லுக்குள் இருந்த மெஷினரிகளை எல்லாம் சிதம்பரத்துக்கே தெரியாமல் கழற்றி எடுத்து கோவைக்குக் கடத்தி காசாக்கிவிட்டாராம் களஞ்சியம். லேட்டாக இதை அறிந்த சிதம்பரம், களஞ்சியத்தின் மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அரசியல் செல்வாக்கை வைத்து ஆக்‌ஷனுக்கு அணை போட்டிருக்கிறார் களஞ்சியம். இதையடுத்து, சிதம்பரமும் காங்கிரஸ்காரர் என்பதால், பஞ்சாயத்து கார்த்தி சிதம்பரத்திடம் போனதாம். அவரது மத்தியஸ்தமும் எடுபடவில்லை என்றதும், கோர்ட்டுக்குப் போய்விட்டார் சிதம்பரம். கோர்ட்டும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு விட்டது. அதற்கும் செக் வைத்தாராம் களஞ்சியம். உடனே, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா தரப்பு உறவுகளைப் பிடித்து தனது செல்வாக்கைக் காட்டி இருக்கிறார் சிதம்பரம். இதையடுத்து 23-ம் தேதி காலையில், 13 லட்ச ரூபாய் ரொக்கத்துடன் களஞ்சியத்தை தூக்கிவிட்டது சிபிசிஐடி போலீஸ். “கடத்தப்பட்ட மெஷினரிகளின் மதிப்பு 2 கோடி” என்கிறாராம் சிதம்பரம். “இல்லை, அதை 70 ஆயிரம் ரூபாய்க்குத்தான் விற்றோம்” என்கிறதாம் களஞ்சியம் தரப்பு. “25 லட்சத்தை வாங்கிக் கொண்டு பிரச்சினையை சுமூகமாக முடியுங்கள்” என்று சிதம்பரத்துக்கு சிலர் பிரஷர் கொடுக்கிறார்களாம். ஆனால், “அதெல்லாம் முடியாது, கடத்தலில் களஞ்சியத்துக்குத் துணை போன அத்தனை பேரையும் கைது செய்யவேண்டும்” என்று பிடிவாதம் பிடிக்கிறாராம் சிதம்பரம். இதனால், களஞ்சியத்தின் தலையைப் போட்டு போஸ்டர் அடித்த காரைக்குடி காங்கிரஸாரில் சிலர் கிலியுடன் சுற்றுகிறார்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in