பேசாம... சத்தியமே வாங்கிருக்கலாமோ!

பேசாம... சத்தியமே வாங்கிருக்கலாமோ!

சிவகங்கை மாவட்டத்தில் தனது யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைதூக்கி விடுவதில் கருத்தாய் இருக்கிறாராம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். இதனால் அவரது சாதிக்காரர்கள் இவரை ‘மாவட்டத்தின் குறுநில மன்னரே’ என்று போஸ்டர் அடித்துக் கொண்டாடுகிறார்கள். நாட்டரசன்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு பெரும்பாலும் முக்குலத்தோர் தான் வருவார்கள். இம்முறை தனது சாதிக்காரரான சத்யா மோகன்ராஜை அங்கே உட்காரவைக்க மெனக்கிட்டார் பெரியகருப்பன். மொத்தம் உள்ள 12 கவுன்சிலர்களில் 8 பேர் திமுக, 2 பேர் காங்கிரஸ் என திமுக கூட்டணி 10 கவுன்சிலர்களை தன்வசம் வைத்திருக்கிறது. மற்ற இரண்டு இடங்களில் ஒன்றை சுயேச்சையும் ஒன்றை அதிமுகவும் வென்றன. இந்த நிலையில், சத்யாவை ஜெயிக்க வைக்க, பெரும் பணம் செலவழித்த பெரியகருப்பன், 10 கவுன்சிலர்களையும் கொடைக்கானலில் கொண்டுபோய் தங்க வைத்திருந்தாராம்.

குறுநில மன்னரே...
குறுநில மன்னரே...

ஆனாலும் முக்குலத்தோர் கவுன்சிலர்கள் சத்யாவை ஆதரிப்பார்களா என்ற சந்தேகம் இருந்ததால் கடைசி நேரத்தில் தான் வேட்பாளர் பெயரை அறிவித்தார்கள். அப்படியும் டவுட் விலகாததால் கவுன்சிலர்களை ’கொடை’ விசிட்டிலிருந்து கூட்டி வரும் வழியில் மடப்புரம் காளி கோயிலுக்கு அழைத்து வந்து, ‘சத்யாவுக்குத்தான் வாக்களிப்போம்’ என சத்தியம் செய்ய வைக்கவும் ஏற்பாடு நடந்ததாம். ஆனால், “நாங்க கட்சி வேட்பாளருக்குத்தான் ஓட்டுப் போடுவோம். அப்புறம் எதுக்கு சத்தியமெல்லாம் பண்ணச் சொல்றீங்க?” என்று திமுக கவுன்சிலர்கள் சத்தியத்துக்கு மறுத்துவிட்டார்களாம். இறுதியில், சத்யாவை எதிர்த்து நின்ற சுயேச்சை கவுன்சிலரும் முக்குலத்தோருமான பிரியதர்ஷினி 10 ஓட்டுகள் பெற்று சேர்மனாகிவிட்டார். கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் தோற்றதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரியதர்ஷினியைக் கட்சியில் சேர்த்து அவரை திமுக சேர்மனாக கணக்குக் காட்டிவிட்டார்களாம் குறுநில மன்னரின் சிப்பாய்கள்.

Related Stories

No stories found.