அண்ணன் மகன் பக்கம் சாய்ந்த அன்பில் பெரியசாமி!

அன்பில் பெரியசாமி
அன்பில் பெரியசாமி

திருச்சி திமுகவில், எம்எல்ஏ-வாக இருந்த காலத்திலிருந்தே கே.என்.நேருவின் ஆதரவாளராக இருந்தவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சித்தப்பாவான அன்பில் பெரியசாமி. பெரியசாமிக்கு எப்போது என்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொடுத்து தனது முகாமிலேயே தங்கவைத்திருந்தார் அமைச்சர் நேரு.

கே.என்.நேரு
கே.என்.நேரு

தனது அண்ணன் மகன் அன்பில் மகேஷ் அமைச்சராக அந்தஸ்து உயர்ந்துவிட்ட நிலையிலும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்த பெரியசாமிக்கு திருச்சி மாநகர் மாவட்ட திமுக செயலாளர் ஆகவேண்டும் என்பது நெடுநாளைய கனவாக இருந்தது. இப்போது திருச்சி மாநகர் மாவட்ட திமுக இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த முறையும் தனது விருப்பத்தை நேருவிடம் சொன்னாராம் பெரியசாமி. “அன்பழகன் மேயராக இருப்பதால் இந்த முறை அவர் தனது மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்கட்டுமே” என்றாராம். ஆனாலும் வழக்கம் போலவே, “இருய்யா... பாத்துக்கலாம்” என்று சொல்லி பெரியசாமியை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தாராம் நேரு.

அன்பழகன்
அன்பழகன்

இந்த நிலையில், அண்மையில் நேருவைச் சந்தித்த பெரியசாமி, மா.செ. விவகாரம் தொடர்பாகப் பேசினாராம். அப்போது அங்கிருந்த மேயர் அன்பழகனும் தனது விருப்பத்தைச் சொல்ல, கடுப்பாகிப் போன நேரு தனது ‘வழக்கமான’ பாணியில் சத்தம் போட்டாராம். இதற்கு மேல் நமக்கு இங்கே காரியம் நடக்காது என்பதைத் தெரிந்துகொண்ட பெரியசாமி, நேருவின் அலுவலகத்திலிருந்து நேராக காரை அண்ணன் மகன் அன்பில் மகேஷ் வீட்டுக்குத் திருப்பிவிட்டாராம்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

“யார் என்ன சொன்னாலும் இனி நான் அண்ணன் மகன் மகேஷ் பக்கம் தான் என்று இப்போது நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் பெரியசாமி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in