ஹாட் லீக்ஸ்- எலெக்‌ஷன் ஒண்ணு... ரிசல்ட் ரெண்டு!

ஹாட் லீக்ஸ்- எலெக்‌ஷன் ஒண்ணு... ரிசல்ட் ரெண்டு!

எலெக்‌ஷன் ஒண்ணு... ரிசல்ட் ரெண்டு!

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் நாம் சொன்னது போலவே பிரளயம் வெடித்துவிட்டது. இங்கே, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட தேவி மாங்குடிக்கு ப.சிதம்பரம் ஆதரவு. தேவியை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் பிரியதர்ஷினி அய்யப்பனுக்கு ஆதரவாக சிதம்பரத்தின் விசுவாசியும் முன்னாள் எம்எல்ஏ-வுமான சுந்தரம் தீயாய் வேலை பார்த்தார். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவில், தேவி வெற்றிபெற்றதாக சான்றிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து பிரியதர்ஷினி தரப்பு அதிகாரம் செய்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி, பிரியதர்ஷினி வெற்றிபெற்றதாகச் சொல்லி அவருக்கும் சான்றிதழ் கொடுத்தார்கள். விவகாரம் இப்போது கோர்ட்டுக்குப் போய், தலைவர் பதவியேற்புக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி காரைக்குடியிலுள்ள எம்பி அலுவலகத்துக்கு வந்தார் கார்த்தி சிதம்பரம். அவருக்கு முன்னதாக சுந்தரம் அங்கே இருந்தார். இதைப் பார்த்துவிட்டு ஆத்திரப்பட்ட தேவி மாங்குடியின் விசுவாசிகள், “கட்சிக்கு துரோகம் பண்ணிட்டு அதிமுகவுக்கு வாக்குக் கேட்ட இந்தாள எதுக்கு உள்ள விட்டீங்க?” என்று மல்லுக்கு நிற்க, அதற்கு சுந்தரம் எசகுபிசகாய் வார்த்தைகளைவிட, இரண்டு தரப்புக்கும் கைகலப்பானது. கார்த்தி முன்னிலையிலேயே சுந்தரத்தை ஒரு கும்பல் வலுவாகத் தாக்கியது. அத்துடன், “இனிமே இவர தலைவர் (சிதம்பரம்) கார்ல ஏத்துனா நாங்களெல்லாம் காருக்கு குறுக்கே விழுவோம்” என்று கார்த்தியின் காதுபடவே சொல்லிவிட்டு கலைந்திருக் கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ!

கே.ஆர்.ஆருக்கு செக் வைத்த அமமுக!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகிலிருக்கிறது கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் சொந்த ஒன்றியம் இது. அதனால், பெரும்பாலும் இங்கே ராமசாமி சொல்பவர்தான் தலைவராக வரமுடியும். இம்முறை தனது மகன் கருமாணிக்கத்தை தலைவராக்க நினைத்தார் ராமசாமி. அதனால், பார்த்துப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தினார். மகனை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக மொத்தம் 6 ஒன்றிய கவுன்சிலர்களில் 5 இடங்களை காங்கிரஸுக்காக கேட்டு வாங்கிய ராமசாமி, திமுகவுக்கு ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கிக் கொடுத்தார். அதிலும் நாங்கள் சொல்பவரையே நிறுத்த வேண்டும் என்று நிபந்தனையும் போட்டார். ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாகத் திரும்பிவிட்டது. 4 இடங்களை அமமுக பெற்று சேர்மன் பதவியைக் கைப்பற்றும் நிலைக்கு வந்துவிட்டது. ராமசாமியின் மகன் கருமாணிக்கமே தட்டுத்தடுமாறித்தான் கவுன்சிலராகி இருக்கிறார்.

Related Stories

No stories found.