நரசிம்மன் சொல்றார்... நயன்தாரா சிரிக்கிறார்!

நரசிம்மன் சொல்றார்... நயன்தாரா சிரிக்கிறார்!

ஆளுக்கொரு நீதி... அடுக்குமா சாமி?

"எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரே தலைவர் தளபதி ஸ்டாலின்தான். காலம் கனியும். தளபதி அரியணை ஏறுவார்” என்று பேசிய மாநில பாஜக துணைத் தலைவர் அரசகுமாருக்கு கட்சியின் தேசியத் தலைமையிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்கள். “அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று சொல்லிவிட்டு திமுகவில் ஐக்கியமானார் அரசகுமார். இதேபோல், கடந்த அக்டோபர் மாதம், திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “வெற்றித் தளபதி” என ஸ்டாலினுக்குப் புகழாரம் சூட்டினார். இப்போது இதையும் விவாதமாக்கி, “அரசகுமாருக்கு அவசரகதியில் நோட்டீஸ் அனுப்பிய பாஜக தலைமை, சிபிஆர் விஷயத்தில் மட்டும் நிதானம் காப்பது ஏன்?” என்று பாஜகவுக்குள் புகைச்சல் கிளம்பியிருக்கிறதாம்.

நரசிம்மன் சொல்றார்... நயன்தாரா சிரிக்கிறார்!

'மூக்குத்தி அம்மன்' படப்பிடிப்புக்காக தற்போது குமரிமாவட்டத்தில் முகாமிட்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த செவ்வாய்கிழமை, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்திருந்தார். அப்போது, கிருஷ்ணகிரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்பி-யும் தற்போதைய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான நரசிம்மனும் அங்கு வந்திருந்தார். நயன்தாராவைப் பார்த்ததும் வலியப் போய் பேசி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நரசிம்மன், “மக்கள் நலனுக்காக நாள் தோறும் சிந்தித்துச் செயல்படுகிறார் நரேந்திர மோடி. நீங்கள் மக்கள் கொண்டாடும் நடிகையாக இருக்கிறீர்கள். உங்களது சினிமா பாப்புலாரிட்டியை ஏன் வீணடிக்க வேண்டும். பேசாமல், பாஜகவுக்கு வந்துவிடுங்கள். பிரதமரின் திட்டங்கள் பற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யலாம்” என்று சொன்னாராம். கழுவும் மீனில் நழுவும் மீனான நயன்தாரா, இதற்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்து மழுப்பிவிட்டாராம். ஆனால் நரசிம்மனோ, “நயன்தாரா டெல்லிக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார். சீக்கிரமே அவர் பாஜகவில் இணைவார்” என்றெல்லாம் தனது நட்பு வட்டத்தில் செய்திபரப்பிக் கொண்டிருக்கிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in