ஹாட் லீக்ஸ்: தமிழிசையும்தரமான சேவையும்

ஹாட் லீக்ஸ்: தமிழிசையும்தரமான சேவையும்

தமிழிசையும் தரமான சேவையும்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது சுப்பிரமணியபுரம் என்ற கிராமத்தில் ஒரு பெண்மணி கண்கலங்கி நிற்பதைப் பார்த்திருக்கிறார். உடனே அந்தப் பெண்ணை தன்னருகே அழைத்து விசாரித்திருக்கிறார். “என்னோட 16 வயசுப் புள்ள மகராசன் கிட்னி பாதிச்சு ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்கான். ஏழையான எங்களுக்கு அவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வழியில்ல. நீங்க டாக்டருன்னு சொன்னாங்க. அதான்...” என்று சொல்லிவிட்டு கதறியிருக்கிறார் அந்தப் பெண்மணி. “நான் மட்டுமில்லம்மா... என்னோட கணவரும் டாக்டர் தான். அதுவும் கிட்னிக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்.  அவருக்கிட்ட சொல்லி உங்க பையனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை குடுக்க ஏற்பாடு பண்றேன்” என்று சொன்ன தமிழிசை. அதன்படியே தனது கணவரின் நண்பரான இன்னொரு மருத்துவரின் உதவியுடன் மகராசனை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். தேர்தலோடு அதை மறந்துவிடாமல், கடந்த வாரம் தொகுதிக்கு வந்தபோது மருத்துவ மனைக்குச் சென்று மகராசனை உடல் நலம் விசாரித்துச் சென்றிருக்கிறார் தமிழிசை.

ராகுல் மாஸ்... நம்ம பாஸ்!

தேர்தல்  பிரச்சாரத்தின்போது வெயிலில் அலைந்ததால் தலையில் நீர் கோர்த்து பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் கார்த்தி சிதம்பரம். இதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளால் வயிறு, வாயெல்லாம் புண்ணாகிவிட்டதாம். இதனால், சென்னை வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் அவர், அண்மையில் சிவகங்கை காங்கிரஸார் சிலர் தன்னைச் சந்திக்க வந்தபோது, “தொகுதிக்குள்ள எனக்கு செல்வாக்கு இருக்கு. நம்ம எல்லாரும் சேர்ந்து சூப்பரா வேலை பார்த்திருக்கோம்னு சொல்றதெல்லாம் சும்மா சார்... இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ராகுல் காந்தி  மாஸ் தான் நம்மள ஜெயிக்க வைக்கப்போகுது பாருங்க” என்று சொன்னாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in