அரசு மருத்துவமனையில் இல்லாவிட்டாலும் செல்லூர் ராஜு கடையில் இருக்கும்!

மதுரையில் இப்படியும் நடக்கிறது
அரசு மருத்துவமனையில் இல்லாவிட்டாலும் செல்லூர் ராஜு கடையில் இருக்கும்!
செல்லூர் ராஜு மெடிக்கல்படம் : கே.கே.மகேஷ்

தென்தமிழகத்தின் மிகப்பெரிய மருத்துவமனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இங்கு அத்தனை சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் ஒரே வளாகத்தில் இயங்குகின்றன.

ஆனால், சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள அதே தரமும், சுத்தம் சுகாதாரமும் இங்கு எதிர்பார்க்க முடியாது. அவ்வப்போது மருந்து தட்டுப்பாடு என்று கூறி, நோயாளிகளை வெளியில் இருந்து மருந்து, மாத்திரை, ஊசி மருந்து போன்றவற்றை வாங்கி வரச்சொல்வதும் உண்டு. இந்த வியாபாரத்தை எதிர்நோக்கி அதே சாலையில் அரசு மருத்துவமனை வளாகத்தையொட்டி, ஜே ஜே மெடிக்கல்ஸ் என்ற பெயரில் ஒரு ஆங்கில மருந்துக்கடை காத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு சொந்தமானது இந்தக் கடை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 17 ஆண்டுகளாக அந்தக் கடை அங்கே செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் இல்லாத மருந்தும் இங்கே தாராளமாய் கிடைக்கும். அதிமுக ஆட்சியில் இங்கே வியாபாரம் ஜோராக நடந்ததாகச் சொல்வார்கள்.

அரசு மருத்துவர்கள் வெளியே வாங்கி வரச் சொல்லி எழுதிக்கொடுத்த மருந்துச்சீட்டு
அரசு மருத்துவர்கள் வெளியே வாங்கி வரச் சொல்லி எழுதிக்கொடுத்த மருந்துச்சீட்டுபடம்: கே.கே.மகேஷ்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. இப்போதும் அரசு மருத்துமனையில் மருந்துத் தட்டுப்பாடு என்று வெளியில் வாங்கி வரச்சொல்லி துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பதும் அதை வாங்கிக்கொண்டு போய், ஜே ஜே மெடிக்கலில் மருந்து வாங்குவதும் தொடர்கிறது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு அரசு மருத்துவமனையில் கொடுத்த மருந்துச் சீட்டுடன், செல்லூர் ராஜூவின் கடையில் மருந்து வாங்கினார். அவரிடம் கேட்டபோது, தனது மகனை பாம்பு கடித்துவிட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட ஊசி மருந்து இல்லை என்று சொல்லி வெளியே வாங்கி வரச் சொன்னதாகவும், எங்கே வாங்குவது என்று கேட்டபோது மருத்துவ மனையைச் சார்ந்தவர்கள் இந்தக் கடைக்கு வழிகாட்டியதாகவும் கூறினார்.

மதுரையில், ஸ்மார்ட் சிட்டி தொடங்கி கழிப்பறை ஒப்பந்தம் வரையில் திமுக அதிமுகவுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. அது மருத்துவமனை வரையில் தொடர்கிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.

Related Stories

No stories found.