ஜாகிர் உசேன் மீது பகீர் புகார்: கரூர் இசைப் பள்ளியில் நடந்தது என்ன?
ஜாகிர் உசேன்

ஜாகிர் உசேன் மீது பகீர் புகார்: கரூர் இசைப் பள்ளியில் நடந்தது என்ன?

கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியர் சுஜாதா என்பவர் தன்மீது அளித்துள்ள பாலியல் புகாரின் பேரில் விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன்.

புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் தமிழ்நாடு அரசின் சார்பில் கலையியல் அறிவுரைஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கி வரும் அரசு இசைப் பள்ளிகளில் ஆய்வு செய்து அந்தப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், கலைகளை மேம்படுத்துவதற்கும் அரசுக்கு பரிந்துரை செய்வது அவரின் முக்கிய வேலை. அந்த வகையில் கடந்த மாதம் 28-ம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப்பள்ளிக்கு அவர் சென்றிருந்தார்.

அப்போது அந்தப் பள்ளியின் பரதநாட்டிய ஆசிரியர் சுஜாதா என்பவர் தன்னிடம் ஜாகிர் உசேன் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். இது குறித்து அந்த ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குநர் காந்திக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், "நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப். 28-ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார். தலைமை ஆசிரியை அறைக்கு என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து 'இப்படி நடனமாட வேண்டும்' என சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

ஜாகிர் உசேனின் கடிதம்
ஜாகிர் உசேனின் கடிதம்

ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்' என ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வருடன் துபாய்க்கு சென்றிருந்த நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் நாடு திரும்பி இருக்கிறார். திரும்பியதும் ஆசிரியையின் இந்த புகார் குறித்து அவருக்கு துறை ரீதியாக விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து அவர் கலை பண்பாட்டு துறைக்கு கடிதம் மூலம் தனது பதிலை தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், "கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு சென்றிருந்தபோது அங்குள்ள மாணவர்களுக்கு பரதநாட்டியத்தில் பாடத் திட்டத்தில் உள்ளபடி சரியான முறைப்படி கற்பிக்கப் படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியரின் அறையில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர் அதற்கு உரிய விளக்கம் தரவில்லை.

இந்த நிலையில் அவர் அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடனும் கைகோர்த்துக் கொண்டு சிறுபான்மையினரான என் மீது அளித்துள்ள பொய்யான புகாரை முற்றிலுமாக மறுக்கிறேன். எனவே இதன் மீது விசாகா கமிட்டி அமைத்து உரிய விசாரணை நடத்தி உண்மையான விளக்கத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதன் மீது உரிய விசாரணை நடத்தி என் மீது களங்கம் சுமத்தும் வகையில் குற்றம் சாட்டிய ஆசிரியை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.