மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர் திருட்டு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர் திருட்டு!

கண்காணிப்பை பலப்படுத்தக் கோரிக்கை

கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பு இல்லாததாலும், போதுமான போலீஸார் இல்லாததாலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதுடன், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகள், பார்வையாளர்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வரக்கூடிய இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளது. தினமும் இங்கு 3 ஆயிரம் உள் நோயாளிகள், 10 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனை ஒரே வளாகத்தில் இல்லாமல், கோரிப்பாளையம் பனகல் சாலையில் 3 இடங்ளில் உள்ளது. கோரிப்பாளையத்தில் பழைய மருத்துவமனை கட்டிடமும், அண்ணா பஸ்நிலையம் அருகே தலைக்காய அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிடமும், அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் உள்ளது.

இந்த மூன்று கட்டிடங்களையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பது அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திற்கு சவாலாகவே இருக்கிறது. அதனால், கடந்த காலத்தில் மருத்துவமனையில் குழந்தை திருட்டு, சிகிச்சைக்கு பணம் கேட்பது, அவசர காலங்களில் விரைவான சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து இந்த மூன்று கட்டிடங்களிலும் முக்கிய வார்டு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவமனை டீன், மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன் போலீஸார் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த கண்காணிப்பு கேமராக்களில் பாதிக்கும் மேல் தற்போது செயல்படவில்லை. மேலும், கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை அங்குள்ள கட்டுப்பாட்டு அறை போலீஸாரும் சரியாக கண்காணிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. மருத்துவமனை பாதுகாப்பிற்கு என தனியாக மருத்துவமனை வளாகத்தில் தனி போலீஸ் நிலையமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ள போலீஸாரை, அடிக்கடி மாற்றுப்பணிக்கு மாநகர காவல்துறை அனுப்பி விடுகிறது. அதனால், மருத்துவமனை கண்காணிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் பெயரளவுக்கே செயல்படுகிறது.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் அடிக்கடி நோயாளிகள், பார்வையாளர்கள் உடமைகள் திருடு போகிறது. கரோனா இரண்டாம் அலை ஏற்பட்ட நேரத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகள் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடுபோனது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்த 7.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கணிணி மற்றும் மருத்துவ உபகரணங்கள் காணாமல் போனது அண்மையில் தெரியவந்திருக்கிறது.

இது குறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கரோனா தொற்று ஏற்பட்டபோது எல்லோருக்கும் அதற்கான சிகிச்சை அளிப்பதிலேயே கவனமாக இருந்துவிட்டோம். அப்போது தான் இந்த திருட்டு நடத்திருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவில் அந்த நிகழ்வுகள் பதிவாகி நீண்ட மாதமாகிவிட்டதால் அதை எடுப்பது சிரமம். அதனால், போலீஸில் புகார் செய்துள்ளோம்” என்றார்.

ஆனந்தராஜ்
ஆனந்தராஜ்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் நம்மிடம் பேசுகையில், “இந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக குழந்தைகள் திருட்டு சம்பவங்கள் நடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதியே நேரடியாக ஆய்வு செய்து மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். அதன் பிறகு குழந்தைகள் வார்டு பகுதியில் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டதால் குழுந்தைகள் திருட்டு நடக்கவில்லை. ஆனால், மற்ற மருத்துவ கட்டிடங்களில் கண்காணிப்பு பெயரளவுக்கே இருக்கிறது. தினமும் சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர், மருத்துவமனை வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். அவர்கள் உடமைகளையும், மருத்துவமனை உபகரணங்களையும் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுக்கு வெளியேயும் நுழைவு வாயிலிலும் சிசிடிவி கேமராக்களை வைக்க வேண்டும். அவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

தற்போது நடந்த ஒரு திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த காலங்களில் இதுபோல் பல நடந்திருக்கக்கூடும். அதனால், மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறை வார்டுகள், அலுவலகங் களில் உள்ள அசையா பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஆண்டிற்கு ஒரு முறை தணிக்கை செய்யப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் என்னென்ன கருவிகள் வாங்கப்பட்டன, அதன் தற்போதைய நிலை பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய சிறப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை கண்காணிக்க அனைத்து பணியாளர்களுக்கும் அடையாள அட்டை, சீருடை அணிய வைப்பதுடன் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையையும் கட்டாயமாக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in