தடுப்பூசி தட்டுப்பாட்டால் திரும்பிச் சென்ற மக்கள்

நாகையில் ஏமாற்றம்
தடுப்பூசி தட்டுப்பாட்டால் திரும்பிச் சென்ற மக்கள்
தடுப்பூசி முகாம்

நாகை மாவட்டத்தில் கீழையூர் ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் சில இடங்களில் கரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நாகப்பட்டினத்தை அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ’மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம்’ திட்டமிடப்பட்டிருந்தது.

கரோனா தடுப்பூசியை நூறு சதவீதம் செலுத்திய ஊராட்சி நிர்வாகத்திற்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஏற்பாட்டில் இன்று முகாம் தொடங்கியதுமே பொதுமக்கள் ஆர்வத்துடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்த வருகை தந்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவாய்மூர், எட்டுக்குடி ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை 7மணி முதல் பல்வேறு வேலைகளை விட்டுவிட்டு, அரசின் வாக்குறுதியை நம்பி கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முகாமிற்கு வருகை தந்திருந்தனர்.

ஆனால், அவர்களது எதிர்பார்ப்பு பொய்யாக்கும் வகையில் எட்டுக்குடி, திருவாய்மூர், திருக்குவளை உள்ளிட்ட பல ஊராட்சிகளில் போதிய அளவிலான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளைச் செய்யும் வகையில், இதுவரை எத்தனை நபர்கள் ஊசி செலுத்திக் கொள்ளவில்லை என்ற கணக்கெடுத்து, ஊராட்சி நிர்வாகம் மூலமாக வீடுகளுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அவ்வாறு செய்த போதிலும், அவர்களுக்குத் தேவையான மருந்தைத் திட்டமிட்டு முன்கூட்டியே இருப்பில் வைத்துக் கொள்ளத் தவறிவிட்டது. இதனால் ஏமாற்றத்துடன் பொதுமக்கள் திரும்பிச் சென்றனர்.

Related Stories

No stories found.