எங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்!

திருச்சி புறநகர் பகுதி மக்கள் திடீர் போராட்டம்
போராட்டத்தில் குண்டூர் ஊராட்சி மக்கள்...
போராட்டத்தில் குண்டூர் ஊராட்சி மக்கள்...

பொதுவாக ஊராட்சியை பேரூராட்சியாகவும், பேரூராட்சியை நகராட்சியாகவும், நகராட்சியை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தவேண்டும் என்றுதான் மக்கள் போராடுவார்கள். ஆனால், திருச்சி மாநகராட்சியோடு இணைக்கப்பட இருக்கும் பல ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம், ஊராட்சியே போதும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தின் மையப்பகுதியாக இருக்கும் திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 65 வார்டுகளைக்கொண்ட மாநகராட்சி பகுதிகளை 100 வார்டுகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகராட்சியோடு ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கான முதல்கட்டப் பணிகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஆனால், நவல்பட்டு, சோமரசம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குண்டூர் ஊராட்சி பொதுமக்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். திருச்சி மாநகராட்சியுடன் தங்கள் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து, தங்கள் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கக்கூடாது என்று மனுவும் அளித்தனர்.

”மிகவும் பின்தங்கிய கிராமப்பகுதியான எங்கள் ஊராட்சியில் விவசாயம் மற்றும் 100 நாட்கள் வேலையையே நம்பியுள்ளோம். அது இல்லாத நாட்களில் ஆடுமாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். மாநகராட்சி ஆகிவிட்டால் 100 நாள் வேலை கிடைக்காது. ஆடுமாடு வளர்ப்பும் பாதிக்கப்பட்டுவிடும். அதனால், எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும். எனவே, எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது” என்கிறார்கள் குண்டூர் மக்கள்.

“பின் தங்கிய இப்பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டால்தான், மற்ற பகுதிகளுக்கு இணையாக வளர்ச்சி காணமுடியும். தொலைநோக்கோடு செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவது அங்குள்ள சில அரசியல்வாதிகள்தான்” என்கிறார்கள் அதிகாரிகள். “தங்கள் இஷ்டத்துக்கு செயல்பட முடியாது என்பதால், மக்களை தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்த வைக்கிறார்கள். ஆனால், அப்பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்படுவது உறுதி” என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in