மின்வாரியம் மீது கடும் அதிருப்தியில் மக்கள்

அரசு செய்ய வேண்டியது என்ன?
மின்வாரியம் மீது கடும் அதிருப்தியில் மக்கள்

தமிழக அரசு துறைகளிலேயே மக்களின் அதிருப்தியை மிக அதிகமாகச் சம்பாதித்து வைத்திருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம். பலருக்கு வழக்கமாக வரும் மின்கட்டணத்தைப் போல இரண்டு, மூன்று மடங்கு பில் வந்திருப்பதே பிரச்சினைக்குக் காரணம்.

மின்கட்டணம்

கரோனா 2ம் அலையின் தீவிரம் உச்சத்தில் இருந்ததால், கடந்த மே 10ம் தேதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக, பல பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று மின் ஊழியர்கள் மின் கட்டணத்தை கணக்கீடு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே, அவ்வாறு கணக்கீடு செய்யாத பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர்கள் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. 2019க்குப் பிறகு மின் இணைப்பு பெற்ற புதிய நுகர்வோர் மற்றும் புதிதாக வேறு வீட்டில் குடியேறிய வாடகை வீட்டுக்காரர்கள் போன்றோரால் பழைய கட்டணத்தைச் செலுத்த முடியாது என்பதால், அவர்கள் மட்டும் மார்ச் மாத கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கூடவே, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அதாவது ஜூலை மாதத்தில் மின் கணக்கீடு மீண்டும் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அதனை இரண்டாகப் பங்கிட்டு முதல் 100 யூனிட்டிற்கான இலவச மின்சார அளவு கழிக்கப்படும் என்றும் எஞ்சிய அளவீட்டிற்கு மட்டுமே மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஜூலை மாதத்திற்கான மின்கட்டணம் வந்தபோது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தார்கள். வழக்கத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்திருப்பதாக அவர்கள் புகார் கூறினார்கள். நான்கு மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்துள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வந்துள்ளதாகவும், அரசு கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக மதுரை வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் கூறுகையில், "நான் தனியார் நிறுவன ஊழியன். கரோனாவை காரணம் காட்டி முதல் அலையின் போதே ஊதியத்தில் 20 சதவிகிதத்தைக் குறைத்துவிட்டது எனது நிறுவனம். எந்த அரசும் அவர்களைத் தட்டிக்கேட்கவில்லை. பள்ளிகள் இணைய வழியில் நடைபெறும் என்று சொன்ன தமிழக அரசு, 75 சதவிகித கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவித்தது. ஆனால், தனியார் பள்ளிகளோ தங்களது கட்டணத்தைத் திடீரென்று 150 சதவிகிதமாக உயர்த்திவிட்டு, அதில் 25 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டார்கள். இந்த மோசடியைக் கேட்க எந்த அதிகாரியும் வரவில்லை. அடுத்து மின்கட்டண கொள்ளை. சமானியர்களைப் பற்றி இந்த அரசாங்கம் என்ன நினைக்கிறது என்றே புரியவில்லை. அடிக்கடி மின்தடை ஏற்படுகிற ஒரு துறை, எங்கள் புகாரை உடனுக்குடன் சரி செய்யாத ஒரு மின்வாரியம், வழக்கமாக 470 ரூபாய் மின்கட்டணம் செலுத்தும் எனக்கு 3364 ரூபாய் கட்டணமாக வந்திருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளரிடம் புகார் செய்தபோது, உங்களைப் போல நிறைய பேர் புகார் சொல்கிறார்கள். 2 மாதமாக இப்படி நூற்றுக்கணக்கான புகார்கள் வருகின்றன. மொத்தமாக கணக்கெடுத்தால் அப்படித்தான் வரும். கணக்கெடுக்கவில்லை என்றால், நீங்களே பழைய கட்டணத்தைச் செலுத்தியிருக்கலாம் அல்லவா? என்று எங்களைத் திருப்பி கேட்கிறார்கள். சத்தியமாக அந்தத் தகவல் எங்களுக்குக் கிடைக்கவில்லை. பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்றார்.

"தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மாற வேண்டும் என்று சொல்லி வாக்களித்தவன் நான். ஆனால், இப்போது ஏன் திமுகவுக்கு ஓட்டுப்போட்டேன் என்று புலம்ப வேண்டியதாகிவிட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் புகார் சொல்லியும் அதற்கு தீர்வு காணாமல் கைவிட்டது பெரிய அதிருப்தியைக் கொடுத்திருக்கிறது" என்றார்.

தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் பணிகள் சார்ந்து அபாரமான அறிவாற்றலைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், மின்கட்டணம் எப்படி கணக்கிடப் படுகிறது என்பது குறித்த அடிப்படை அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை. மின்வாரியமும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் இதுகுறித்த துண்டு பிரசுரத்தை மின்வாரியம் வழங்க வேண்டும். கூடவே, திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடுவதற்கு பதிலாக மாதாமாதம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மின்வாரியம் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியில் பாதியாவது குறையும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in