பசுமையாய் இருந்த மலை பாலைவனமாய் மாறிய சோகம்

ஆக்கிரமிப்பின் பிடியில் ஜம்புக்கல் மலை!
ஜம்புக்கல் மலை - அனுமதியின்றி வெட்டப்பட்ட கிணறு
ஜம்புக்கல் மலை - அனுமதியின்றி வெட்டப்பட்ட கிணறு

பதின்மூன்று கிராமங்களின் மேச்சல் நிலமாக இருந்த மலை உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஜம்புக்கல் மலை. வனத்துறையின் சமூக காடு வளர்ப்பு திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்த மலை, பாய்ந்தோடிய நீரோடை என பசுமையாக இருந்த இந்த மலை இப்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி பாலைவனமாக மாறிவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது ஜம்புக்கல் மலை கரடு. இதன் ஒரு பகுதி மானுப்பட்டி ஊராட்சிக்கும், மறுபகுதி ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்கும் உட்பட்டது. ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட இம்மலையில் அரசுக்கு சொந்தமான பூமி மட்டுமே 950 ஏக்கர் உள்ளது. இம்மலையின் நடுவே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிலமில்லாத ஏழைகள் பயன்பெற நபர் ஒருவருக்கு தலா ஒரு ஏக்கர் என்ற அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரசு ‘கண்டிஷன் பட்டா’ (அரசு எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறும் பட்டா) வழங்கியது.

காய்ந்து கிடக்கும்  நீரோடை
காய்ந்து கிடக்கும் நீரோடை

போதிய நீராதாரம் இல்லாதது, வறுமை உள்ளிட்ட பல காரணங்களால், நிலத்துக்கு கண்டிஷன் பட்டா பெற்ற பலரும் அதில் விவசாயம் செய்யாமல் நகரங்களை நோக்கி குடிபெயர்ந்தனர். தற்போதைய சூழலில் நில உடமையாளர்கள் பலர் உயிருடன் இல்லை. சிலரது வாரிசுகளிடம் இருந்த நிலமும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த மலையில் அரசு கொடுத்த கண்டிஷன் பட்டா நிலங்கள் மட்டுமின்றி புறம்போக்கு நிலமும், நீரோடைகளும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.

மரங்கள் வெட்டப்பட்டு பாதை அமைப்பு...
மரங்கள் வெட்டப்பட்டு பாதை அமைப்பு...

இதுகுறித்து ஆண்டியகவுன்டனூர் கிராம நிர்வாக அலுவலர் சிவபிரகாஷ் கூறும்போது, “ஜம்புக்கல் மலை கரடு பகுதியில் 950 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் சிலரது பட்டா நிலமும் உள்ளது. அதில் தனி நபர் ஒருவர் அண்மையில் சுமார் 17 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் வெடிவைத்து கிணறு வெட்டி வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளை செய்து வருகிறார். ஆனால், இந்தப் பகுதியில் வெடிவைத்து கிணறு வெட்டுவதற்கு வருவாய்துறை சார்பில் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை” என்றார்.

உடுமலை வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் இதுகுறித்து கேட்டபோது, “ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு தொடர்பான புகார் வந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்று முடித்துக் கொண்டார்.

அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ்குமார் இது தொடர்பாக நம்மிடம் பேசுகையில், “ஜம்புக்கல் மலை பகுதியில் சமூக காடு வளர்ப்புத் திட்டத்தில் ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன. ஆனால், அதில் ஏராளமான மரங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து சமூக காடு வளர்ப்பு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பமுடியாது” என்று சொன்னார்.

வெட்டி எரிக்கப்பட்ட மரங்கள்
வெட்டி எரிக்கப்பட்ட மரங்கள்

ஜம்புக்கல் மலையிலிருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி மலையின் இயற்கைத் தன்மையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் பிரதான கோரிக்கை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in