அலுவலகத்தை பூட்டினர் தீட்சிதர்கள்: இன்றும் திரும்பிச் சென்றது அறநிலையத்துறை குழு

அலுவலகத்தை பூட்டினர் தீட்சிதர்கள்: இன்றும் திரும்பிச் சென்றது அறநிலையத்துறை குழு
கோயிலுக்கு வந்த அறநிலைத்துறை குழுவினர்

சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை குழு, இன்றும் தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பால் ஆய்வு செய்ய இயலாமல் திரும்பிச் சென்றது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் பக்தர்கள் தரப்பில் இருந்து சொல்லப்பட்ட புகார்களை அடுத்து தமிழக அறநிலையத்துறை சார்பில் அதனை விசாரிக்கவும், கணக்கு வழக்குகளை சரிபார்க்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது.

இதுகுறித்து கோயில் பொது தீட்சிதர்களுக்கு தகுந்த முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ள உள்ள ஆய்வினை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தீட்சிதர்கள் தரப்பில் இதற்கு பதில் அளித்து கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து இந்திய குடியரசு தலைவர், இந்திய பிரதமர் ஆகியோருக்கும் தீட்சிதர்கள் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திட்டமிட்டபடி ஆய்வு செய்வதற்கு அறநிலையத்துறை சார்பிலான குழு நேற்று கோயிலுக்கு வருகை தந்தது. அவர்களுக்கு ஒத்துழைக்க தீட்சிதர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை வழக்கறிஞர் மூலமாக சுட்டிக்காட்டி ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காலையில் திரும்பிச் சென்ற அறநிலையத்துறை குழுவினர் மாலையில் திரும்பவும் வந்து ஆய்வு செய்ய முயன்றனர். அப்போதும் இதே காரணங்களை சொல்லி தீட்சிதர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று இரண்டு வேளையும் ஆய்வு செய்ய முடியாமல் குழுவினர் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், மீண்டும் இன்று காலை கோயிலுக்கு வந்த அறநிலைத்துறை குழுவினரை வழிமறித்த தீட்சிதர்கள், நேற்று சொன்ன காரணங்களை சொல்லி, அறநிலையத் துறை ஆய்வு நடத்த உரிமை இல்லை என்று மறுப்பு தெரிவித்தனர். கோயில் பொது தீட்சிதர்கள் அலுவலகத்தையும், மற்ற முக்கிய இடங்களையும் பூட்டுப் போட்டு பூட்டிவிட்டனர். அதனால் கோயிலை வெறுமனே வலம் வந்த அறநிலையத்துறை குழுவினர் ஆய்வு எதுவும் செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்த அறிக்கையை அறநிலையத்துறை ஆணையரிடம் அளிக்க இருப்பதாகவும், அதற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர் அறிவிப்பார் என்றும் குழுவினர் தெரிவித்துச் சென்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் நடராஜர் கோயில் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடராஜர் கோயிலில் சொத்து கணக்குகளை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழவீதி கோயில் வாயிலில் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயில் சொத்து கணக்கை காட்ட மறுக்கும் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பதை கண்டித்தும், கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in