கழிவுநீரை இங்கே விடலாமா?

மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றும் ஒரு சர்ச்சை!
நீதிபதிகள் குடியிருப்புக்குச் சொல்லும் பாதை...
நீதிபதிகள் குடியிருப்புக்குச் சொல்லும் பாதை...

உயர் நீதிமன்ற மதுரை கிளையைச் சுற்றி கடந்த 2 வாரங்களாக பரபரப்பு நிலவுகிறது. அப்படியென்ன முக்கியமான வழக்கு விசாரணை அங்கே நடக்கிறது என்று எல்லோருக்கும் கேள்வி எழலாம். குற்றச்சாட்டே, நீதிமன்றம் மீதுதான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பிரச்சினை இதுதான். மதுரை மாநகராட்சியை ஒட்டியிருக்கும் யா.ஒத்தக்கடை ஊராட்சி கழிவுநீரும், மழைநீரும் உலகநேரி கண்மாய்க்குள் போவது வழக்கம். இப்போது அங்கே உயர் நீதிமன்ற கிளை இருப்பதால், உள்ளே தண்ணீர் வரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட, அந்தத் தண்ணீரை எல்லாம் ஒத்தக்கடை ஊராட்சி எல்லையில், அதாவது உயர் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்புக்குச் செல்லும் நுழைவாயில் அருகே உள்ள ஒரு கிணற்றில் தேக்கி அங்கிருந்து லாரி மூலம் அகற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒத்தக்கடை ஊராட்சி.

அதேநேரத்தில், உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள எஞ்சிய கண்மாய் பகுதியில் பெரியாறு கால்வாயில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பி, அதை அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கிறார்கள் அதிகாரிகள்.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

இப்படி சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், தொடர் மழையால் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஒத்தக்கடையில் இருந்து வெள்ளமெனப் பெருக்கெடுத்துவரும் தண்ணீர், கழிவுநீருடன் கலந்து உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள நீர்நிலைக்குள் பாயத் தொடங்கியது. சின்னச் சின்ன தடுப்பு நடவடிக்கைகள் எல்லாம் பயனளிக்காததால், நீதித் துறையின் அதிருப்திக்கு ஆளானார்கள் அதிகாரிகள்.

இதனால், அவசர அவசரமாக வேறு நீர்நிலைகளுக்குத் தண்ணீரைத் திருப்ப அனைத்து அரசு துறைகளும் முழுவீச்சில் இறங்கியிருக்கின்றன. அதை எங்கள் பகுதிக்குள் விடுவதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். அப்படி எதுவும் செய்துவிடக்கூடாது என்று முத்துவிநாயகா நகர், அயோத்தி நகர், உலகநேரி கிராம குடியிருப்புவாசிகள் ஊராட்சி நிர்வாகம் தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரையில் புகார் மேல் புகார் கொடுக்கிறார்கள்.

விளைவாக, மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட அலுவலர், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு பிரச்சினைக்குரிய இடத்தைத் தினந்தோறும் ஆய்வு செய்கிறார்கள். இரவு பகலாக அங்கே ஏதாவது வேலை நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு பொக்லைன் இயந்திரம் அங்கேயே தயாராக நிற்கிறது. தண்ணீர் நீதிமன்றத்துக்குள் போய்விடக்கூடாதே என்று ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் நள்ளிரவிலும் அச்சத்தோடு வந்து பார்வையிடுகிறார்கள்.

பாஸ்கர் மதுரம்
பாஸ்கர் மதுரம்

இந்தப் பிரச்சினை தொடர்பாக, முத்துவிநாயகா நகர், அயோத்தி நகர், உலகநேரி கிராம குடியிருப்புவாசிகள் சார்பில் புகார் கொடுத்தவரும் அங்கே வசிப்பவருமான வழக்கறிஞர் பாஸ்கர் மதுரத்திடம் பேசினோம். “ஒத்தக்கடை ஊராட்சியில் இருந்து வரும் கழிவுநீர் உயர் நீதிமன்ற கிளைக்குள் புகக்கூடாது என்பதால், நீதிபதிகள் குடியிருப்பு நுழைவாயில் அருகே சேகரிக்கப்பட்டு அங்கிருந்து பம்ப் செய்து லாரிகள் மூலம் எடுத்துச்சென்று ராஜகம்பீரம் கண்மாயில் விடுகிறார்கள்.

இப்போது ஊர் பெரிதாகிவிட்டதாலும், தொடர்மழையாலும் தண்ணீர் பெருக்கெடுத்து உயர் நீதிமன்ற காம்பவுண்டுக்குள் உள்ள கண்மாய்க்குள் சென்றது. கழிவுநீர் கலந்த தண்ணீர் நீர்நிலையை மாசுபடுத்திவிடும் என்பதால், உள்ளே தண்ணீர்விடக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவசர அவசரமாக ஒரு திட்டம் தீட்டி அங்குள்ள தண்ணீரை எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள குளத்திலும், உலகநேரி சிறுகண்மாயிலும் விடுவதற்கு முயற்சி நடக்கிறது.

மேலும், குடியிருப்புகளுக்கு நடுவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டவும் ஏற்பாடு நடப்பதாக அறிந்தோம். எனவே, இதுகுறித்து அனைத்து அதிகாரிகளிடமும் புகார் செய்தோம். சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கச் சொன்னார்கள். நீதிமன்றம் குறித்து நீதிமன்றத்திலேயே வழக்குப் போடுவது சரியாக இருக்காது என்றுதான், பதிவாளரிடம் முறைப்படி புகார் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய கேள்வி ஒன்றுதான். நீதிபதிகள் குடியிருப்பு அருகில் உள்ள கண்மாயில் கழிவுநீர் கலப்பது ஆபத்து என்றால், எங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள கண்மாயில் கழிவுநீர் கலப்பது ஆபத்தா இல்லையா?” என்றார்.

இந்தப் பிரச்சினை பற்றி ஒத்தக்கடை ஊராட்சிமன்றத் தலைவர் முருகேஸ்வரியின் கணவர் சரவணனிடம் கேட்டபோது, “முன்பெல்லாம் ஒத்தக்கடையில் பெய்கிற மழைநீர் உலகநேரி கண்மாய்க்குள் பாய்ந்து, அது நிரம்பியதும் கலுங்கு வழியாக வெளியேறி உலகநேரி சிறுகண்மாய்க்குச் செல்லும். உயர் நீதிமன்ற கிளை இருப்பதால், நாங்கள் கழிவுநீரைத் தடுத்து லாரி மூலம் ராஜகம்பீரம் கண்மாயில் விடுகிறோம். கழிவுநீரைத் தடுத்துவிடலாம். மழைநீரை என்ன செய்வதென்று தெரியவில்லை. எவ்வளவு தடுத்தாலும் அது பள்ளத்தைப் பார்த்தே பாய்கிறது. முத்துவிநாயகா நகர், அயோத்தி நகர் மக்கள் எதிர்ப்பதால், இப்போது கழிவுநீரை அங்கே கொண்டுசெல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். எனவே, வழக்கம்போல இங்கேயே கழிவுநீரைச் சேகரித்து லாரி மூலம் அப்புறப்படுத்தப் போகிறோம்” என்றார்.

ஹரிபரந்தாமன்
ஹரிபரந்தாமன்

உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்தை அறிவதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமனிடம் பேசினோம். “முதலில் கண்மாய்க்குள் நீதிமன்றத்தைக் கட்டியதே தவறு. கட்டிய பிறகும்கூட உலகநேரி கண்மாயின் ஒருபகுதியை நீதிமன்ற காம்பவுண்டுக்குள் விட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும். நான் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணியாற்றியபோது, அந்தக் கண்மாய் கரையில் உட்கார்ந்து அழகை ரசித்திருக்கிறேன். எனவே, மழைநீரை கண்மாய்க்குள் விடக்கூடாது என்று சொல்வதில் நியாயமில்லை. அந்தத் தண்ணீர் கண்மாயை நிரப்பி, உபரிநீர் கலுங்கு வழியாக வெளியேறினால்தான் அடுத்தடுத்துள்ள கண்மாய்களுக்குத் தண்ணீர் போகும். எனவே, அதைத் தடுக்கக் கூடாது.

அதேநேரத்தில் எக்காரணம் கொண்டும் கழிவுநீரை கண்மாய்க்குள் விடக்கூடாது. அது உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கண்மாயாக இருந்தாலும் சரி, எந்தக் கண்மாயாக இருந்தாலும் சரி. நம்முடைய அரசு கழிவுநீரைத் தனியே பிரித்து, முறைப்படி சுத்தம் செய்யாததுதான் கூவம், நொய்யல், வைகை உட்பட பல ஆறுகளும், கண்மாய்களும் சாக்கடையாக மாறியதற்குக் காரணம். எனவே, இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் எல்லாம் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இங்கே அரசே அதைச் செய்வது வேதனையளிக்கிறது” என்றார்.

மழை ஓய்ந்தால் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என இந்த விவகாரத்தையும் நினைக்காமல், நிரந்தரத் தீர்வுக்கான வழிகளை அதிகாரிகள் கண்டடைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in