தாலிபான்கள்
தாலிபான்கள்

சர்வாதிகாரம் நீண்ட காலம் நீடிக்காது

தாலிபான்களிடமிருந்து தப்பிய ஆப்கானியர் பேட்டி

மத்திய அரசின் ஐசிசிஆர் திட்டத்தின்கீழ், வெளிநாட்டைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் அரசு உதவித் தொகையுடன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரம் இடங்களில், 1000 இடங்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தோர் இந்தியாவில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். கேரள பல்கலைக்கழகத்தில் தங்கி ஆய்வுப்படிப்பை மேற்கொண்டுவரும் ஆப்கானியர்கள், இப்போதைய ஆப்கனின் அரசியல் சூழலால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழக ஆய்வு மாணவரான முபாக்கர் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், “ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் தாலிபான்கள் நுழைந்துவிட்ட தகவல் கிடைத்ததுமே பீதியாகிவிட்டேன். நான் கேரளத்தில் இருக்கிறேன். ஆனால், என் பெற்றோர்கள் ஆப்கனில் இருப்பதால் இன்னமும் பதற்றமடைகிறேன். என் சகோதரர் ஆப்கன் தேசிய ராணுவத்தில் அதிகாரியாக பணிசெய்கிறார். நான் என் குடும்ப உறுப்பினர்களை அழைத்துப் பேசினேன். அவர்கள் அனைவருமே தாலிபான்களுக்கு மிகவும் பயப்படுகிறார்கள். தொலைபேசியில் அவர்களிடம் பேசும்போதே அச்சம் தெரிகிறது. என் சகோதரர் ராணுவ அதிகாரி என்பதால் அவரது உயிருக்கு அதிக ஆபத்து உள்ளது.

ஆப்கனின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அதிகாரங்கள் அனைத்தும் அடிப்படைவாதிகளின் கைக்கு போனதுமே என் சகோதரர் பணியைக் கைவிட்டு வீடு திரும்பிவிட்டார். தேசத்தின் இறையாண்மை விழுந்துவிட்ட பின்பு ராணுவத்துக்கு என்ன வேலை இருக்கிறது? அண்டைநாடான பாகிஸ்தான் தாலிபான்களுக்கு எல்லாவகையிலும் ஆதரவு அளிக்கிறது. என்றாலும் சர்வாதிகாரம் நீண்டகாலத்துக்கு நீடிக்காது. சட்டத்தின்படியான ஆட்சி, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை புறந்தள்ளி பாகிஸ்தானின் திட்டங்களை ஆப்கனில் தாலிபான்கள் செயல்படுத்த முயன்றால் ஆப்கன் மக்கள் அதை உறுதியாக எதிர்ப்பார்கள்.

அப்பாவிகளைக் கொல்வதிலும், ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு களை அழிப்பதிலும் தாலிபான்களுக்கு 25 வருட அனுபவம் இருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் தாலிபான்கள் பிடியில் சிக்கவேண்டியவன். நான் பாக்டியா மாகாணத்தில் உள்ள என் சொந்த கிராமத்திற்கு ஒரு திருமண விழாவுக்குச் சென்றேன். பாக்டியா பகுதி தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நான் அங்கிருந்து திரும்பும்போது தாலிபான்கள் என்னை கொல்லவோ, கடத்தவோ திட்டமிட்டனர். இது உறவினர் ஒருவர் மூலம் தெரியவர, அங்கிருந்து தப்பினேன். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு 2 நாட்கள் நான் தூங்கவில்லை. அங்கிருந்து கிளம்பாமலேயே உறவினர்களையும், ஊர்க்காரர்களையும் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக நம்பவைத்தேன். அப்படித்தான் அவர்கள் மூலமே தாலிபான்களுக்கு தவறான தகவலைக் கொடுத்துத் தப்பித்தேன்.


தாலிபான்களுக்கு பயந்து ஏற்கெனவே ஆப்கனில் உள்ள ராணுவ உயரதிகாரிகளும், அரசு உயர் பொறுப்புகளில் இருந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். நீண்ட காலம் நீடித்துவந்த உள்நாட்டு வன்முறை முடிவுக்கு வந்திருக்கிறது என்பதைத் தாண்டி இதில் ஆரோக்கியமான விஷயம் எதுவுமே இல்லை. தேசம் கிளர்ச்சியாளர்களின் கைக்கு போய்விட்டது. இது தொடக்கம் தான். தாலிபான்களின் ஆட்சியில் இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கேரளத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறேன். எனது சொந்த நாட்டிற்கு படிப்பு முடிந்து சென்றால் நிச்சயமாக எனக்கு இருண்ட காலம் தான். ஆப்கனில் நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்தில் அரசுப்பணியில் இருந்த நான், கல்வியின் மீதுகொண்ட ஆர்வத்தால் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு கேரளம் வந்தேன். அதிர்ஷ்டவசமாக நான் கேரளப் பல்கலைக்கழகத்தில் சேரும்போது என் மனைவி, குழந்தைகளையும் அழைத்துவந்தேன். இப்போதைய சூழலில் ஆப்கனுக்கு திரும்பும் எண்ணமே எங்களுக்கு இல்லை. இந்தியாவிலேயே தங்க விரும்புகிறோம். இங்கே அமைதியாக இருக்கிறது’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in