வனப் பரப்பு அதிகரிப்பு: மாநில அரசுகளை பின்னுக்கு இழுக்கும் மத்திய அரசு!

வனப் பரப்பு அதிகரிப்பு: மாநில அரசுகளை பின்னுக்கு இழுக்கும் மத்திய அரசு!

சென்னை மட்டுமின்றி தமிழகத்தையே ஒருவழியாக்கிக் கொண்டிருக்கிறது மழை. எல்லாம் பருவநிலை மாற்றத்தின் விளைவு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் நேரடியாகப் பாதிக்கப்படும் நிலையில் மாநில அரசுகளே இருப்பதால், தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டத் தொடங்கியிருக்கின்றன மாநில அரசுகள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக அரசு பொறுப்பேற்றதுமே, தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பெயரை சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்று மாற்றியது. கூடவே, 3 அறிவிப்புகளையும் வெளியிட்டது. 1. காலநிலை மாற்றத்துக்கான ஓர் இயக்கம், 2. சதுப்புநிலப் பாதுகாப்பு இயக்கம், 3. பசுமைப் போர்வை அதிகரிப்பு இயக்கம். இந்த 3 திட்டங்களையும் செயல்படுத்துவதற்குத் தமிழ்நாடு ’கிரீன் கிளைமேட் கம்பெனி’ என்று தனி நிறுவனத்தையும் தொடங்குவதாக அரசு அறிவித்தது.

அடுத்தகட்டமாக, தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இத்திட்டத்தின்கீழ், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும், இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு வனத் துறையின் நாற்றங்கால்களில் ரூ.15/- மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், ‘இம்மரக் கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செலவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம். வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செலவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மேலும், நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டுவரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும்போது, வனத் துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும்வகையில், நடவுசெய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே தரிசு நிலங்களிலும், புன்செய் நிலங்களிலும் மரம் நட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளை இந்தத் திட்டம் பெருமளவில் ஈர்த்திருக்கிறது. கண்டிப்பாக இந்தத் திட்டம் அரசின் எண்ணத்தை ஈடேற்றும் என்கிற நம்பிக்கை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், மத்திய அரசின் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சியானது, காடுகளைப் பாதுகாப்பதைவிட அதை அழித்தொழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருப்பது போல் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

"சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்திரா காந்தி, அன்றைய சூழலில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் பல மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்படவில்லை என்கிற காரணத்தால் புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததோடு, இந்திய ஒன்றியத்தின் முதல் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. மாநில அரசுகளைவிட ஒன்றிய அரசே காடுகளின் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுகின்றது" என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நக்கீரன்.

இச்சட்ட திருத்தத்தில், 'ஈகோ டூரிஸம்' என்று கூறப்பட்டிருப்பதே தவறு என்று சுட்டிக்காட்டும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், “காட்டுப்பகுதி என்பது மிகப்பெரும்பாலான மக்களுக்கு புரியாத சிக்கலான தகவமைப்பைக் கொண்டது. பல்லாண்டு காலம் காட்டில் வாழ்பவர்களால் மட்டுமே காடு குறித்த அறிவைப் பெற முடியும். இந்நிலையில் காடுகள் குறித்த அனுபவத்தைப் பெறுவது என்ற கருத்தாக்கம் அடிப்படையிலேயே தவறானது. அதற்கு அரசே ஊக்குவிப்பது அரசு அமைப்புகளின் புரிதலின்மையைக் காட்டும் நடவடிக்கையே.

உல்லாச, கேளிக்கை விடுதிகளை காட்டுப் பகுதியில் கட்டினால்தானே பிரச்சினை எழும், தற்காலிக கட்டுமானங்கள் எழுப்புவதால் என்ன பிரச்சினை வந்துவிடும் என்று சிலர் கேட்கலாம். இப்படித்தான் ரிஷிகேஷில் படகு சவாரி செய்வதற்காக ஆற்றங்கரையோரம் தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குடில்கள் ஆண்டில் 8 மாதங்கள் வரை பயன்படுத்தப்பட்டன. இதன் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த போது, தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்ட 8 மாதமும் ஆற்றங்கரைப் பகுதிக்கு எந்த விலங்கும் தண்ணீர் அருந்த வரவில்லை. இது அக்காட்டுயிர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினை என்று கண்டறியப்பட்டது” என்கிறார்.

”சூழல் சுற்றுலாக்களை ஊக்குவித்தால் காட்டுப்பகுதிக்குள் புதிய கட்டுமானங்களை எழுப்ப வேண்டியது வரும். குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகள் உருவாக்க வேண்டும். இவை அனைத்துமே காட்டுயிர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவை தங்கள் வாழ்விடத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்” என்கிறார் ’ஓசை’ அமைப்பைச் சேர்ந்த காளிதாசன்.

ஆக, சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு ஓரடி முன்வைத்தால், மத்திய அரசு இரண்டடி பின்னால் இழுப்பதாகச் சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றது போல, வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த முயற்சிகளையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in