அந்த ப்ளூ சட்டையே வேணுமா..?

அந்த ப்ளூ சட்டையே வேணுமா..?
ஓவியம்: முத்து

அபார்ட்மென்ட் வாசல்ல பாத்திர வண்டியைப் பார்த்ததுமே பகீர்னுச்சு. படியேறும் போது பெரியவர் ஒரு மூட்டையோட அத்தன பூரிப்பா இறங்கினார். மூட்டைக்குள்ர துருத்திக்கிட்டுருந்த பேன்ட்டை எங்கியோ பார்த்தாப்ல இருந்துச்சு.

வீட்டுக்குள்ர போனா அம்மிணி கையில எவர்சில்வர் தூக்கு. எதிர் வீட்டு அம்மிணி எங்கம்மிணியை ஏகமா பாராட்டிக்கிட்டு இருந்தாங்க. “நல்லாப் பேசி தூக்கை வாங்கிட்டீங்க. கனமா இருக்கு. எப்படியும் நாலஞ்சு லிட்டர் கொள்ளும்”னு.

வேகமா உள்ர ஓடி என் துணி வைக்கிற இடத்தைப் பார்த்தேன். யூனிபார்ம் மட்டும் கெடந்துச்சு. ஹோட்டல் ரவா தோசை மாதிரி அம்பது ஓட்டையோட இருந்த பனியனைப் பெரியவர் வாங்கிக்க மாட்டார்னு அம்மிணியே மூலைல வீசி இருந்தாங்க.

“தூக்கைப் பார்த்தீங்களா”ன்னு வந்தாங்க. எரிமலை எப்படிப் பொறுக்கும்னு எனக்குள்ர டயலாக் ஓடுச்சு. “ஒங்கக்கிட்ட சொன்னா கேக்கமாட்டீங்க. அதான் டக்குனு முடிவெடுத்துட்டேன்”னாங்க.

படக்குனு ஞாபகம் வந்துச்சு. என் ராசியான ப்ளு கலர் ஷர்ட். தேடுனா அதையும் காணோம். பால்கனி வழியா எட்டிப் பார்த்தா வண்டிக்கு பின்னால துணி மூட்டையோட பெரியவர் ஹேப்பியா போய்க்கிட்டு இருந்தாரு. இறங்கி ஓடிப்போய் அதை மட்டுமாச்சும் திருப்பிக் கொடுத்துருய்யான்னு கேட்கத் தோணுச்சு. கேவலமா இருக்கும்னு அடக்கிக்கிட்டேன்.

அந்த ஷர்ட் மேல அவ்ளோ பிரியம். பழைய துணியைத் தூக்கிப் போடுரப்பல்லாம் அந்த சட்டையை மட்டும் அடியில பத்திரப்படுத்திருவேன். அந்த ஷர்ட்ல நான் நல்லா இருக்கேன்னு அடுத்த சீட்டு அம்மிணி ஒரு தடவை சொன்னாங்க. சொல்லிட்டுச் சிரிச்சாங்க. அன்னிக்கு எல்லோருமே கலர் ட்ரெஸ்ல ஆபிஸுக்கு வந்திருந்தோம். பக்கத்து சீட்டு அண்ணாச்சி போட்டோவும் எடுத்துட்டாரு.

மறுநாள் ஆபிஸ் போனதும் என்னையும் மீறி புலம்பிட்டேன். “என்ன சார்... சின்னப் புள்ளையாட்டம். சின்ன வயசுல நான் போட்டிருந்த கவுனு எனக்கு ரொம்பப் பிடிச்சுது. இப்ப அதைப் போட முடியுமா. கொஞ்ச நாள் வச்சிருந்து அப்புறம் தூக்கிப் போட்டாச்சு. விட்டுத் தள்ளுங்க”ன்னு அ சீ அம்மிணி அசால்ட்டா சொன்னாங்க.

எதிர்ல வச்ச டீ ஆறுனது தெரியாம பழைய போட்டோவை உத்துப் பார்த்தேன். அண்ணாச்சி என் தோளைத் தட்டுனாரு. “ஒங்களைப் பார்க்கவே சகிக்கல”ன்னாரு. என் மூஞ்சி மாறுனதும் அவசரமா சொன்னாரு. “இந்த மாதிரி சோகத்துலன்னு சொன்னேன். இப்ப என்ன... அந்த சட்டை வேணும். அவ்ளோதானே. வாங்க ஒரு லோக்கல் பர்ச்சேஸ் போட்டுக்கிட்டு டவுனுக்குப் போவோம். அதே டிசைன் ஷர்ட் வாங்குவோம். ஓக்கேவா”ன்னாரு.

என்கிட்ட சொன்னதோட நிக்காம அம்மிணிட்டயும் சொன்னாரு. “நீங்களும் வரீங்க. ஒருத்தருக்கு ரெண்டு பேரா தேடுவோம். இன்னிக்கு சார் அதே ஷர்ட்டோட வீட்டுக்குப் போறாரு. அதுக்கு நாம கேரண்ட்டி”ன்னு ஸ்டைலா சொன்னாரு.

பாஸ் இன்னிக்கு கான்ஃப்ரன்ஸுன்னு போயிட்டார். மதியம் சாப்பாடே வெளியே வச்சுக்கலாம்னு அண்ணாச்சி சொல்லிட்டாரு. “கேண்டின்ல சாப்ட்டு சாப்ட்டு அலுத்துப் போச்சு”ன்னு அதுக்கு ஒரு பில்டப் கொடுத்தாரு.

நாலு ஸ்பெஷல் மீல்ஸுன்னு கார் டிரைவருக்கும் சேர்த்து அவரே ஆர்டர் செஞ்சாரு. சப்பாத்தி, சூப்னு அடுக்கிட்டாங்க. “இந்த சாப்பாட்டுக்கு பீடா இருந்தாத்தான் நிறைவு”ன்னு நாலு பீடாவும் கணக்குல சேர்த்தாரு.

டவுன்ல இருந்த நாலஞ்சு பெரிய துணிக்கடை பேரைச் சொல்லி எங்கே போவலாம்னாரு. அம்மிணி அக்கறையா கேட்டாங்க. “முன்னால வச்சிருந்த சட்டை எங்கே வாங்கினதுன்னு ஞாபகம் இருக்கா சார்.”

அண்ணாச்சி குறுக்கே பூந்தாரு. “அதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும். எல்லாக் கடையையும் அலசிருவோம்”.

எனக்கும் சட்டுனு நினைப்பு வரல. முதல் கடையில ஜென்ட்ஸ் ஷர்ட் மூணாவது மாடின்னாங்க. லிஃப்ட்க்கு பெரிய கூட்டம் நிக்கவும், “நீங்க முன்னால படியேறிப் போங்க. நானும் அம்மிணியும் லிஃப்ட்ல பின்னாடியே வந்துடறோம்”னாரு. “நேரத்தை வீணாக்க வேண்டாம்ல. அதுக்காவ சொன்னேன்”னு கூடவே சேர்த்துக்கிட்டாரு.

மொபைலை ஆன் செஞ்சு இதே போல ஷர்ட் வேணும்னு கேட்டேன். நான் சொன்னதைக் காதுல வாங்காம அவரு ஏழெட்டு சட்டையை எடுத்துப் போட்டாரு. இது இல்லன்னு சொன்னா, “ஸ்லாக் வேணுமா ஃபுல் ஹேண்ட் வேணுமா”ன்னு அவரு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அண்ணாச்சியும் அம்மிணியும் சிரிச்சுக்கிட்டே வந்தாங்க. “கிடைச்சுருச்சு போல. சார் மூஞ்சில ஹேப்பி தெரியுதே”ன்னாரு அண்ணாச்சி. “நான் ஒண்ணு கேட்டா இவரு ஒண்ணு எடுத்துப் போடுறாரு”ன்னு புலம்பினேன். அண்ணாச்சி சப்போர்ட் பண்ணுவார்னு பார்த்தா மேலே கிடந்ததுல ஒரு ஷர்ட்டை எடுத்து என் மேல் வச்சு அழகு பார்த்தாரு.

“செம்மையா இருக்குல்ல சாருக்கு”ன்னு அம்மிணிட்ட கேட்டாரு. “அவருக்கு எந்த ஷர்ட் போட்டாலும் எடுப்பா இருக்கும்”னு அம்மிணியும் சொல்லிட்டு “ஷிபான்லாம் எந்த ஃப்ளோர்”னு விசாரிச்சாங்க. அண்ணாச்சி தம் பங்குக்கு, “டி ஷர்ட் செக்‌ஷன் எங்கே”ன்னு கேட்டாரு.

வேற வழி இல்லாம நானே தேட ஆரம்பிச்சேன். மொபைலை சேல்ஸ்மேன் வாங்கி அஞ்சு நிமிஷம் உத்துப் பார்த்தாரு. “இப்ப இது அவுட் ஆஃப் ஃபேஷன். லேட்டஸ்ட் டிசைன் காட்டவா”ன்னு இன்னும் பத்து ஷர்ட்டை உருவிப் போட்டாரு.

அடுத்த கடையைப் பார்ப்போம்னு கிளம்பிட்டேன். அம்மிணியும் அண்ணாச்சியும் முனகிட்டே வந்தாங்க. டிரைவர் ஒரு குட்டித் தூக்கமே போட்டுருந்தாரு. நாலாவது மாடிக்கு லிஃப்ட் கிடைச்சு போனோம். முப்பது நாப்பது சட்டையைப் பார்த்தாச்சு. நான் தேடுனது கிடைக்கல.

தேடுற ஆர்வத்துல அம்மிணியும் அண்ணாச்சியும் அங்கே போட்டுருந்த சேர்ல உக்காந்து தூங்குனதைக் கவனிக்கல. போய் எழுப்பினதும் “கிடைச்சுருச்சா”ன்னு கோரஸா கேட்டாங்க.

அப்பதான் சேல்ஸ்மென் ஒரு ப்ளூ ஷர்ட்டை எடுத்துக்கிட்டு ஓடிவந்தாரு. “நீங்க கேட்ட அதே சட்டை”ன்னு சொல்லவும் அண்ணாச்சியும் அம்மிணியும் என் கையைப் புடிச்சு குலுக்கினாங்க. “சக்சஸ்”னு கத்துனாங்க. என்னைப் பேச விடாம பில் போட வச்சுட்டாங்க.

வீட்டுக்கு வந்தா அம்மிணி என் மூஞ்சிக்கு நேரா என் பழைய சட்டையைக் காட்டுனாங்க. “ஒளிச்சு வச்சிருந்ததால இதை அன்னிக்கு போடல. இந்தாங்க ஒங்க அருமையான சட்டை”ன்னு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in